சிஎம்சி மருத்துவமனை காவலாளியைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நேற்றைக்கு முன்தினம், மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியேறிய பேருந்து மற்றும் மருத்துவரின் காருக்கு ஆற்காடு சாலையில் நிறுத்தி இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வழிவிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை சிஎம்சி மருத்துவமனை காவலாளி ஆட்டோ ஓட்டுநர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆட்டோவை அப்புறப்படுத்தும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மருத்துவமனை காவலாளியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவலாளியை தாக்கியது தெரியவந்துள்ளது. மேலும், காவலாளியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனை காவலாளியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.