காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சிறுவளையம் பஞ்சாயத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேசிய மாநில பொதுச் செயலாளர் எஸ்.பி. ஜி. கிருஷ்ணமூர்த்தி, "காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறிய திமுக அரசைக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் ரூ.1000/- வழங்குவதாக வாக்குறுதி தந்த தி.மு.க அரசு இப்போது பெரும்பான்மையானபெண்களுக்கு உரிமைத் தொகை வழங்க மறுக்கிறது. ஆறுகள் தோறும் தடுப்பணைகள் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திமுக அரசு அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருக்கிறது. மணல், கல் குவாரிகள் செயல்பாட்டில் ஊழல் மலிந்து கனிமவளக் கொள்ளை தமிழகமெங்கும் நடந்து வருகிறது. தமிழகத்தின் இயற்கை வளம் வெளிய மாநிலங்களுக்குக் கடத்தப்படுகிறது. அங்கன்வாடி மையங்கள் போதுமான அடிப்படை வசதிகளின்றியும், குழந்தைகளுக்குத் தகுந்த பாதுகாப்புமின்றியும், செயல்பட்டு வருவதை வேடிக்கைப் பார்க்கிறது திமுக அரசு.
ஆளும் திமுக அரசின் இந்த செயல்பாடுகளை கண்டித்து நாங்கள் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி. நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். திமுக அரசை மாற்ற நாங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போராடுவோம்" என்று கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.