வேலூர் மாவட்டம் திருவலம் அருகே அம்முண்டி பகுதியில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அரவைக்காக கரும்பு வழங்கி வருகின்றனர். இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பராமரிப்பு பணியானது கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று சர்க்கரை ஆலையின் கன்வேயர் பெல்ட் அருகே பராமரிப்பு பணியிற்காக வெல்டிங் வேலை நடைபெற்று வந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக கன்வேயர் பெல்ட் மீது தீப்பொறி பட்டதில் தீ பற்றி எரிந்தது. காற்று வீசியதில் தீ வேகமாக பறவையதன் காரணமாக மின்சார வயர்களிலும் தீப்பற்றிக் கொண்டது. இதனைக் கண்ட பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் சர்க்கரை ஆலை ஊழியர்களும் அங்கிருந்து உடனடியாக வெளியேறி திருவலம் காவல் நிலையம் மற்றும் காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சர்க்கரை ஆலையின் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாக்கி இருக்க கூடும் என தெரிய வருகிறது. தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டதால் சர்க்கரை ஆலை முழுவதும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருவலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.