அரக்கோணத்தில் நீதிமன்ற உத்தரவுபடி கட்டடத்தை கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைக்க முயன்ற போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், படம் பிடித்த செய்தியாளரை காவலரின் மனைவி கடித்து வைத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அரக்கோணம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இது முதலில் 2005ல் பத்மாவதி என்பவருக்கும், அதே சொத்து 2007ல் சாவித்ரி என்பவருக்கும் விற்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் வணிக வளாகத்தை யார் நிர்வகிப்பது என பத்மாவதி மற்றும் சாவித்ரிக்கு இடையே பிரச்சினை நிலவி வந்த நிலையில், 2019ல் ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வணிக வளாகம் பத்மாவதிக்குத் தான் சொந்தம் என தீர்ப்பு வழங்கியது. 

ஆனால் அதை ஒப்படைக்காமல் சாவித்ரி காலம் தாழ்த்தி வந்த நிலையில், நீதிமன்ற ஊழியர்கள் இருவர் நகர காவல்துறையினர் பாதுகாப்புடன் அரக்கோணம் விஏஒ முன்னலையில் அந்த இடத்தை கையகப்படுத்த முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5க்கும் மேற்பட்ட பெண்கள் காவல்துறை மற்றும் நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக பேசியதுடன், சண்டையில் ஈடுபட்ட காவலரின் மனைவி செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரின் தோளில் கடித்து வைத்து அராஜகம் செய்துள்ளார். 

காயமடைந்த செய்தியாளர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவழியாக கட்டடம் கைப்பற்றப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.