ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் விஷால் (வயது 19), பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த சில வருடங்களாக அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 28-ந் தேதி இரவு மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த விஷால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த அதே பகுதியை சேர்ந்த விஷாலின் உயிர் நண்பனான அஜித் என்கிற குண்டு (வயது 20) சம்பவ இடத்திற்கு ஓடி வந்தார். தூக்கில் தொங்கிய நண்பனை கீழே இறக்கி கதறி அழுதார். மேலும் அஜித், விஷாலை ஆஸ்பத்திரிக்கு பதறி அடித்துக் கொண்டு தூக்கிச் சென்றார்.
டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், விஷால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில் நண்பன் விஷால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட கயிற்றை கையில் வைத்துக் கொண்டு, வாலிபர் அஜித் என்ன செய்வதறியாமல் அங்கும், இங்கும் பித்து பிடித்தது போல் சுற்றித்திரிந்தார். மேலும் விஷால் உடலை புதைத்த சுடுகாட்டிற்கு, அஜித் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
கடந்த 30-ந்தேதி இரவு அஜித், மதுபாட்டில், சுவீட், பழம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு விஷால் உடல் புதைத்த இடத்திற்கு மீண்டும் சென்றுள்ளார்.
மதுவை விஷால் புதைத்த இடத்தில் ஊற்றி, சுவீட் மற்றும் பழங்களை படையலிட்டு அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தாராம்.
அப்போது அந்த வழியாக சென்ற சிலர், அஜித்துக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில், நண்பன் விஷால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றில், அஜித்தும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அவரது உறவினர்கள், விஷால் உடல் புதைத்த இடத்திற்கு பக்கத்திலேயே அஜித் உடலையும் புதைத்தனர்.
அஜித் இறப்பதற்கு முன்பு அதிகாலை 2.50 மணிக்கு, விஷாலுடன் தான் எடுத்துக்கொண்ட படங்களை செல்போன் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, நானும் வருகிறேன் என பதிவிட்டிருந்தார்.
மேலும் அஜித் பெயரை விஷாலும், விஷால் பெயரை அஜித்தும் தனது நெஞ்சினில் 2 பேரும் பச்சை குத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைபிரியாத நண்பர்கள் 2 பேரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.