ராணிப்பேட்டை, சிப்காட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ராணிப்பேட்டை எம்.பி.டி. சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பம் சேதமடைந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர், நகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பணியிலும், சேதமடைந்த மின்கம்பம் மற்றும் மின் ஒயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், மின் வாரிய அலுவலகர்கள், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதேபோல் ராணிப்பேட்டை பெரியார் நகர், வாணாபாடி சாலை, ெரயில்வே ஸ்டேஷன் சாலை உள்ளிட்ட இடங்களிலும் மரக்கிளைகள் விழுந்ததில் மின் ஒயர்கள் சேதமடைந்தது. புளியங்கண்ணு, தெங்கால் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மரங்கள், மரக்கிளைகள் விழுந்து மின்கம்பங்கள், மின் ஒயர்கள் சேதமடைந்தது. இதனால் நவல்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
கோடை வெப்பத்தை தணிக்க இந்த மழை ஓரளவு உதவியாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இருந்த போதிலும் சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.