ராணிப்பேட்டை அருகே லாலாபேட்டை, முகுந்தராயபுரம் ஊராட்சிகள் உள்ளன. இந்த 2 ஊராட்சிகளுக்கிடையே கடந்த சில மாதங்களாக ஊராட்சி எல்லை உள்பட சில பிரச்சனைகள் நிலவி வருகிறது.
இதற்காக 2 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கடையடைப்பு உள்பட பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முகுந்தராயபுரம் தி.மு.க நிர்வாகிகள் லாலாபேட்டையில் தி.மு.க கட்சி கொடி ஏற்றுவதற்காக சென்றனர்.
இதற்கு லாலாபேட்டையை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி தாக்கி கொண்டனர். இது பற்றிய தகவல் அறிந்த அக்ராவரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் கைகலப்பில் காயம் அடைந்த லாலாபேட்டையை சேர்ந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும்போது அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர்கள் வழிமடக்கி தாக்கியதாக கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் லாலாப்பேட்டையிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
லாலாபேட்டை மற்றும் முகுந்தராயபுரம் ஊராட்சிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் இரு ஊராட்சிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பொதுமக்கள் சாலை ஓரத்திலே குவிந்திருப்பதால் இரு ஊராட்சிகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.