ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை தலைமை இடமாகக் கொண்டு ஒரு பெண் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் மாத சீட்டு நடத்தி அதற்காக தொழிலாளர்களிடம் தினசரி பணம் வசூல் செய்து வந்துள்ளார்.

சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் தராமல் இவர் ஏமாற்றி இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆரணி, கார்த்திகேயன் சாலையில் புனித அன்னை காணிக்கை ஆலயத்தின் எதிரே மாடிப்பகுதியில் அதே பெண் சீட்டு நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ஆரணி பகுதியைச் சேர்ந்த 10 பேர் சீட்டில் சேர்ந்துள்ளார்கள்.

பணம் கட்டியவர்களிடம், சீட்டு எடுக்க வந்தால் 10-ம் மாதம் கடைசியாக எடுத்துக் கொள், இப்போது கிடையாது என அந்த பெண் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்து தாங்கள் ஏமாற்றப்பட போகிறோம் என கருதி அவரிடம் பணம் கட்டியவர்கள் ஆரணி நகர போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர். இதனை அறிந்த அந்த பெண் 2 மாத காலமாக ஆரணி பகுதிக்கு வரவில்லை.

இந்த நிலையில் காலை அந்த பெண் ஆரணிக்கு வந்ததை பார்த்தவர்கள் உடனடியாக ஆரணி நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் அந்த பெண் நடத்தி வந்த சீட்டு நிறுவனத்துக்கு சென்றனர்.

அங்கு இருந்த அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின்னாக அவர் பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அவரை ஆரணி நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது அப்பகுதியில் சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்களுக்கு தங்களை ஏமாற்றிய பெண் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு உள்ளார் என்ற செய்தி தீயாய் பரவியது . சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஆரணி நகர போலீஸ் நிலையத்தை சூழ்ந்து கொண்டனர்.

வசூலை நிறுத்தி விட்டு இப்போதே பணத்தை திருப்பிக் கொடுத்து விடுங்கள் என அந்த பெண்ணிடம் போலீசார் கூறினர். அதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும், நான் கடைசியாக தான் தருவேன் என கூறினார். அவரிடம் பணத்தை பெற்றுத்தர தொடர்ந்துபோலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.