ராணிப்பேட்டையில் நேற்று இரவு சாலை சென்டர் மீடியன் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து பொன்னை (தெங்கால்) நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று இரவு சென்னை- சித்தூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. ராணிப்பேட்டை அடுத்த ஆட்டோ நகர் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை சென்டர் மீடியன் மீது மோதியது.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக டிரைவர் உட்பட பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் எந்த காயமுமின்றி உயிர் தப்பினர். விபத்தில் சிக்கிய பஸ் கிரேன் மூலம் அகற்றப்பட்டு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை முத்துக்கடை முதல் வி.சி.மோட்டூர், நவல்பூர், வாலாஜா ரோடு, ஆற்காடு ரோடு, அம்மூர் ரோடு, மாந்தாங்கல் ரோடு, எம்.பி.டி.ரோடு, கிருஷ்ணகிரி ட்ரங்க்ரோடு, எல்எப்சி ரோடு போன்ற பிரதான நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை நடுவே தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 35க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்து உள்ளன.
எனவே, இதுபோன்று அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.