தமிழகம் முழுவதும் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வேலூா் மாவட்டத்தில் மட்டும் 6 டாஸ்மாக் மதுக்கடைகள் வியாழக்கிழமை முதல் நிரந்தரமாக மூடப்படும் என்று ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதனை அமல்படுத்தும் விதமாக தமிழக சட்டப்பேரவையின் மதுவிலக்கு, ஆயத்தீா்வை மானியக்கோரிக்கையின்போது தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 5,329 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 500 மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான அரசாணை கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இந்த அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் வியாழக்கிழமை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிா்வாகம் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் குடியாத்தம் சுண்ணாம்பட்டறை (கடை எண் -11034), குடியாத்தம் சந்தைப்பேட்டை மேல்பட்டி சாலை (11041), வேலூா் சுடுகாட்டு வழி எம்ஆா்எப் கம்பெனி அருகில் (11046), ஒடுகத்தூா் பேருந்து நிலையம் வன அலுவலகம் எதிரில் (11117), காட்பாடி திருவலம் சென்னை - சித்தூா் சாலை (11245), பென்னாத்தூா் அமிா்தி பிரதான சாலை (11340) என மாவட்டம் முழுவதும் 6 டாஸ்மாக் கடைகள் வியாழக் கிழமை முதல் நிரந்தரமாக மூடப்படும் என்று ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டையில்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகின்றன என ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

வாலாஜா வட்டம், அனந்தலை ஊராட்சிக்குட்பட்ட கீழ்புதுப்பேட்டை கடை எண் - 11202, கலவை வட்டம், திமிரி - கலவை சாலை அகரம் கிராமம் கடை எண் - 11028 ஆகிய இரண்டு அரசு மதுபான கடைகள் 22- ஆம் தேதி முதல் இயங்காது என்றாா்.