சகோதரர்கள் தினம் : சகோதரர்களுக்கு அன்பும், மரியாதையும் செலுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே 24ஆம் தேதி சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

1844ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது.


நினைவு நாள் :-


நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்

🌹 உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் மைகொலாஜ் கோபர்நிக். பல்கலைக்கழகத்தில் படித்தபோது, நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்று மாற்றிக்கொண்டார்.

🌹 எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள் நடைபெற்றன. வானியல் குறித்து அதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரிய மையக் கோட்பாட்டை வகுத்தார். கோள்களின் பின்னோக்கிய நகர்வு, அவற்றின் ஒளி வேறுபாடுகள் ஆகியவற்றையும் விளக்கினார். விண்மீன்கள் அமைந்துள்ள இடங்களை வரையறுத்துக் கூறினார்.

🌹 இவரது காலத்துக்கு பிறகே இவரது கோட்பாடுகளை கலீலியோ உள்ளிட்ட பிரபல வானியலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆன் தி ரெவல்யூஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் என்ற நூலில் தனது ஆய்வுகள் குறித்து எழுதியுள்ளார். இதில் பூமி தனது அச்சில் சுழல்கிறது என்பதையும், பூமியை சந்திரன் சுற்றி வருகிறது என்றும் துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்.

🌹 வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல், சட்ட நிபுணர், மருத்துவர், பழங்கலை அறிஞர், மதகுரு, ஆளுநர், அரசு தூதர் என பல துறைகளில் தனது பங்களிப்பை வழங்கிய நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் தனது 70வது வயதில் 1543ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


அலெக்சாண்ட்ரினா விக்டோரியா


👰 இந்தியாவின் முதல் பேரரசியான அலெக்சாண்ட்ரினா விக்டோரியா 1819ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

👰 இவர், தனது 18வது வயதில் இங்கிலாந்தின் ராணியானார். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகள் 7 மாதங்களாகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

👰 இவரது காலம் தொழிற்புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராஜ்ஜியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசாகவும் திகழ்ந்தது.

👰 ஐரோப்பாவின் பாட்டி எனும் பட்டப் பெயரை கொண்ட விக்டோரியா மகாராணி, 81வது வயதில் (1901) மறைந்தார்.


டேனியல் பாரன்ஹீட்


👉 பாதரச கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த ஜெர்மானிய இயற்பியலாளர் டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட் 1686ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி பிறந்தார்.

👉 இவர் ஆல்கஹால் தெர்மாமீட்டர் (Alcohol thermometer) கருவியை கண்டுபிடித்தார். மேலும், பாரன்ஹீட் வெப்பநிலை அலகின் கண்டுபிடிப்பால் இவர் பெரிதும் அறியப்படுகிறார்.

👉 இவரின் பெயரை வைத்தே அவ்வலகிற்கு பாரன்ஹீட் வெப்பநிலை அலகு எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இவர் தன்னுடைய 50வது வயதில் (1736) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


1218 – ஐந்தாவது சிலுவைப் போர் வீரர்கள் இசுரேலின் ஏக்கர் நகரில் இருந்து எகிப்து நோக்கிப் புறப்பட்டனர்.

1276 – மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார்.

1487 – இங்கிலாந்தின் மன்னர் ஏழாம் என்றியின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முகமாக, 10-வயது லாம்பர்ட் சிம்னெல் டப்ளின் நகரில் ஆறாம் எட்வர்டு என்ர பெயரில் முடிசூடினான்.

1607 – 100 ஆங்கிலேயக் குடியேறிகள் ஜேம்சுடவுனில் குடியேறினர். இதுவே ஆங்கிலேயர்களின் முதலாவது அமெரிக்கக் குடியேற்றம் ஆகும்.

1626 – பீட்டர் மினிட் மன்ஹாட்டன் நகரை விலைக்கு வாங்கினார்.

1738 – ஜோன் உவெசுலி மெதடிச இயக்கத்தை ஆரம்பித்தார்.

1762 – பேச்சுவார்த்தைக்காக இலங்கை வந்து சேர்ந்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதி ஜோன் பைபசு என்பவரை கண்டி மன்னர் கீர்த்தி சிறீ இராஜசிங்கன் வைபவரீதியாக வரவேற்றார்.[1]

1798 – அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று.

1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலா மீதான முற்றுகையை ஆரம்பித்தார்.

1832 – இலண்டன் மாநாட்டில் கிரேக்க இராச்சியம் அறிவிக்கப்பட்டது.

1844 – முதலாவது மின்னியல் தந்திச் செய்தியை சாமுவெல் மோர்சு வாசிங்டனில் இருந்து பால்ட்டிமோருக்கு அனுப்பினார். அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought (விவிலியத்தில் எண். 23:23).

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் வேர்ஜீனியாவின் அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றினர்.

1883 – நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் 14 ஆண்டுகள் கட்டுமானத்தின் பின்னர் பொது மக்களுக்குத் திறக்கப்பட்டது.

1900 – இரண்டாம் பூவர் போர்: ஐக்கிய இராச்சியம் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தை இணைத்துக் கொண்டது.

1901 – தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆத்திரிய-ஆங்கேரியுடன் போரை ஆரம்பித்தது.

1940 – நாடு கடந்த நிலையின் வாழ்ந்து வந்த உருசியப் புரட்சியாளர் லியோன் திரொட்ஸ்கி மீது மெக்சிக்கோவில் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.

1941 – இரண்டாம் உலகப் போர்: வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் “பிஸ்மார்க்” என்ற செருமனியப் போர்க்கப்பல் “ஹூட்” என்ற பிரித்தானியக் கடற்படைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1958 – இலங்கை இனக்கலவரம், 1958: இலங்கையில் பொலன்னறுவை தொடருந்து நிலையத்தில் தொடருந்தில் வந்த தமிழ்ப் பயணிகள் தாக்கப்பட்டனர். பல இடங்களிலும் இனக்கலவரம் பரவியது.[2]

1962 – மேர்க்குரித் திட்டம்: அமெரிக்க விண்ணோடி ஸ்கொட் கார்ப்பென்டர் பூமியை அவ்ரோரா 7 விண்பெட்டகத்தில் மூன்று முறை வலம் வந்தார்.

1967 – இசுரேலின் செங்கடல் கரையை எகிப்து முற்றுகையிட்டுக் கைப்பற்றியது.

1981 – இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. தியாகராஜா தேர்தல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது இனந்தெரியாதோரால் சுடப்பட்டு, அடுத்த நாள் உயிரிழந்தார்.

1981 – எக்குவடோர் அரசுத்தலைவர் யைம் அகிலேரா, அவரது மனைவி, அவரது குழுவினர் விமான விபத்தில் இறந்தனர்.

1982 – ஈரான் – ஈராக் போர்: ஈரான் கொரம்சார் துறைமுகப் பகுதியை ஈராக்கிடம் இருந்து மீளக் கைப்பற்றியது.

1991 – எத்தியோப்பியாவில் இருந்து யூதர்களை தனது நாட்டுக்குக் கொண்டு வரும் சொலமன் நடவடிக்கையை இசுரேல் ஆரம்பித்தது.

1992 – தாய்லாந்தில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து, அந்நாட்டின் கடைசி சர்வாதிகாரி சுச்சின்டா கிரப்பிரயூன் பதவி விலகினார்.

1992 – பொசுனியா எர்செகோவினாவில் கொசாரக் பகுதியில் செர்பிய இராணுவத்தின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பமானது.

1993 – எதியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது.

1994 – நியூயார்க், உலக வர்த்தக மையத்தில் 1993 ஆம் ஆண்டில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட நால்வருக்கு 240 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

1999 – கொசோவோவில் போர்க்குற்றங்கள், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுக்காக சிலோபதான் மிலொசேவிச் மீது நெதர்லாந்து, டென் ஹாக் நகரில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

2000 – 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இசுரேலியப் படையினர் லெபனானில் இருந்து வெளியேறினர்.

2000 – இலங்கையில் நோர்வே தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.

2006 – விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.

2007 – ஈழப்போர்: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்தனர்.

2007 – ஈழப்போர்: கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்து நால்வர் காயமடைந்தனர்.

2014 – பெல்ஜியம், பிரசெல்சு நகரில் யூத அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்.

2014 – கிரேக்கத்திற்கும் துருக்கிக்கும் இடையில் ஏஜியன் கடலில் 6.4 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றது. 324 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


1686 – டானியல் பேரென்கைட், போலந்து-செருமானிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1736)

1794 – வில்லியம் ஹியூவெல், ஆங்கிலேய மெய்யியலாளர், மதகுரு (இ. 1866)

1819 – ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா (இ. 1901)

1905 – மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (இ. 1984)

1913 – கண. முத்தையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பதிப்பாளர் (இ. 1997)

1921 – சு. வேலுப்பிள்ளை, ஈழத்து நாடகாசிரியர், எழுத்தாளர்

1928 – ஜனா கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசியல்வாதி (இ. 2007)

1929 – கரோலின் சூமேக்கர், அமெரிக்க வானியலாளர்

1941 – பாப் டிலான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர்

1942 – பிரேசர் இசுட்டோடார்ட்டு, இசுக்காட்டுலாந்திய வேதியியலாளர்

1946 – தென்சு சில்லர், துருக்கியின் 22-வது பிரதமர்

1949 – ரொஜர் டிக்கின்சு, ஆங்கிலேயத் திரைப்பட ஒளிப்பதிவாளர்

1953 – ஆல்ஃப்ரெட் மோலினா, ஆங்கிலேய நடிகர்

1955 – ராஜேஷ் ரோஷன், இந்திய இசையமைப்பாளர்

இன்றைய தின இறப்புகள்


1543 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1473)

1950 – ஆர்ச்சிபால்ட் வேவல், இந்தியாவின் 43வது தலைமை ஆளுநர் (பி. 1883)

1981 – சி. பா. ஆதித்தனார், தமிழக ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1905)

2008 – சி. வேலுசுவாமி, மலேசிய எழுத்தாளர் (பி. 1927)

2012 – பாலாம்பிகை நடராசா, இலங்கை வானொலிக் கலைஞர், இசைக்கலைஞர்

2014 – டேவிட் அலன், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1935)

2016 – இரா. வை. கனகரத்தினம், இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர் (பி. 1946)

2021 – எஸ். என். நாகராசன், தமிழக மார்க்சிய சிந்தனையாளர் (பி. 1927)

இன்றைய தின சிறப்பு நாள்


 பொதுநலவாய நாள் (பெலீசு)

விடுதலை நாள் (எரித்திரியா, எத்தியோப்பியாவில் இருந்து, 1993)