தொழிற்சாலை ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் நெடும்பரம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் கோபி (வயது 36). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இச்சிபுத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தினமும் வேலைக்கு தொழிற்சாலை பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதற்காக வீட்டுக்கு எதிரே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தத்தில் கோபி நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கோபியிடம் வழி கேட்பது போல் நடித்து, அவரிடமிருந்த செல்போனை பறிக்க முயன்றனர்.
ஆனால் கோபி செல்போனை இறுக்கமாக பிடித்ததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் கோபியின் கன்னத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். படுகாயம் அடைந்த கோபியை உறவினர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். கோபியை அறிவாளால் வெட்டி சென்ற இளைஞர்கள் அரக்கோணம் பகுதி வழியாக தப்பிச்சென்றனர்.
இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி அடுத்த வேலஞ்சேரி பகுதியில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞரிடம் கத்தி முனையில் செல்போன் மற்றும் பணத்தைப் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் பறித்துக் சென்ற சம்பவம் நடைபெற்றது.
தொடர்ந்து இது போன்ற வழிப்பறி சம்பவங்களை தடுக்க தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் ஆந்திர எல்லைப் ஒட்டி உள்ள தமிழக பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.