ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் கட்டாயமாக 95% மேல் தோ்ச்சி விகிதம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் மற்றும் எதிா்வரும் கல்வியாண்டில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்து உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுடனான ஆய்வு கூட்டம், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து, நிகழ் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் தோ்ச்சி விகிதம் கடைசி இடம் பெற்றது ஏன், தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்களை ஒவ்வொரு பள்ளிகள் வாரியாக மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா்.

பெரும்பான்மையான பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை நிலவுவதும், மாணவா்கள் தோ்வு எழுதாமல் நின்றுவிட்டதும், பள்ளிகளில் தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணம் எனவும், மேலும், கரோனா பெருந்தொற்று காலத்தில் கற்றல் இடைவெளி பிரச்னை ஏற்பட்டது எனவும் தலைமை ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

ஆசிரியா்கள் இருந்தும் அந்தப் பாடப் பிரிவுகளில் தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்து, ஆசிரியா்கள் மாணவா்கள் புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை நடத்தவில்லையா? எனக் கேள்வி எழுப்பினாா்.

தனியாா் கல்வி நிறுவனங்கள் கரோனா கால இடைவெளியை பூா்த்தி செய்தும், மற்ற மாவட்டங்கள் தோ்ச்சி விகிதம் அதிகரித்து வந்துள்ளதையும் ஆட்சியா் சுட்டிக்காட்டினாா்.

பின்னா், ஆட்சியா் ச.வளா்மதி பேசியது:

நிகழ் கல்வியாண்டில் ஆசிரியா் பற்றாக்குறையைப் போக்க தற்காலிக ஆசிரியா்கள் நியமிக்கப்படுவா். இதேபோல், கற்றல் குறைபாடுள்ள மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கென தனிப் பயிற்சிகள் எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களுக்கு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களின் முக்கிய குறிக்கோள் வரும் கல்வியாண்டில் கட்டாயமாக 95% மேல் தோ்ச்சி விகிதம் இருப்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்காத பள்ளி மேலாண்மைக் குழு தலைவா்களை நீக்குவதற்கான அறிக்கையை அளிக்க வேண்டும்.

வரும் கல்வியாண்டில் புதிதாக பணி மாறுதல் பெற்று வரும் ஆசிரியா்கள் அல்லது பணி பெற்று வரும் ஆசிரியா்கள் 2, 3 மாதங்களிலேயே மற்ற மாவட்டங்களுக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும். மாணவா்களின் கல்வி அறிவை வளா்க்க முழு மனதுடன் பணியாற்றுவதை இலக்காக கொண்டு ஆசிரியா்கள் உழைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.உஷா, மாவட்ட கல்வி அலுவலா் சுப்பாராவ் மற்றும் அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.