ராணிபேட்டை மவாட்டம் வாலாஜாபேட்டை அருகே பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவிலில் கருவறை பூட்டை உடைத்து பூஜை பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த வன்னிவேடு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சிவாலயமான ஸ்ரீ புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது ஷடாரண்ய‌ஷேத்திரத்தில் ஒன்றாகும்.

மேலும் நேற்று இரவு பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை வழக்கம் போல் பூட்டி விட்டு சென்று உள்ளனர். இந்நிலையில் இன்று காலை கோவிலில் பூஜை செய்து வரும் பூசாரி மனோஜ் என்பவர் கோவிலை திறக்க வந்து பார்த்தபோது பிரதான வாசலில் உள்ள பூட்டும், சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளின் கருவறை பூட்டுகளும், உண்டியல் பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் உள்ளே கருவறைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பூஜை பொருட்களான குத்துவிளக்கு, தீபாராதனை தட்டுகள், சரபேஸ்வரர் சன்னதியில் இருந்த 4.5 அடி உயரமுள்ள சூலம் ஆகியவை உள்பட பூஜைக்கு தேவையான அனைத்து சாமான்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வருட காலத்துக்குள் நான்காவது முறையாக இந்த கோவிலில் தொடர்ந்து பூட்டை உடைத்து பொருட்களை திருடி செல்லும் சம்பவம் இக்கோவிலில் வாடிக்கையாகவே மாறிவிட்டது. தொடர்ந்து திருட்டு சம்பவம் தொடர்பாக வாலாஜாப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கோவிலில் திருடி சென்ற மர்ம நபர்களை குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.