வாலாஜாபேட்டை முத்தையா தெருவை சேர்ந்தவர் யுவராஜ். இவர் நேற்று முன்தினம் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்தார். அந்த ரெயில் நேற்று அதிகாலை காட்பாடி ரெயில் நிலையம் வந்தது. அப்போது சீட்டில் செல்போனை சார்ஜ் போட்டு இருந்தார். பின்னர் அதனை பார்த்தபோது செல்போன் இல்லை. திருட்டுப்போயிருந்தது. இதுகுறித்து அவர் காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இதேபோல மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஆஷிக் இக்பால் என்பவர் ஹவுராவிலிருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ் பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் பயணம் செய்தார். நேற்று அதிகாலை ரெயில் காட்பாடி ரெயில் நிலையம் வந்தது. சீட்டில் சார்ஜ் போட்டிருந்த அவரது செல்போனை காணவில்லை.
இதுகுறித்து அவர் காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இந்த புகார்களின் பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரெயில் நிலைய வளாகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது ஆஷிக் இக்பால் கொடுத்த புகாரின் பேரில் 2-வது நடைமேடையில் இருந்த சேலத்தை சேர்ந்த முகமது அலி (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் 2-வது நடை மேடை கழிவறை அருகில் இருந்த சேலத்தை சேர்ந்த லிங்கேஸ்வரன் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.