அரக்கோணம் அடுத்த தண்டலம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (25), தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி குமுதா(18). இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது. 

2 தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் குமுதா வேர்கடலைகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது அவர், திடீரென மயங்கி விழுந்தார். 

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

சிறிது நேரத்தில் மீண் டும் குமுதா மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள், அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்த புகாரின் பேரில், அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து குமுதா எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் அரக்கோணம் ஆர்டிஓ மற்றும் ஏஎஸ்பி ஆகியோர் நேற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.