தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒன்பது மாவட்டங்களில் வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 104.72 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் கூட வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. சில மாவட்டங்களில் இப்போதே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. சென்னையில் வெயில் தற்போது வறுத்தெடுக்க தொடங்கி உள்ளது. பிற்பகல் 4 மணிக்கு கூட வெயிலின் உஷ்ணம் தாக்கி வருகிறது. இதனால் வெப்ப அலை கொஞ்சம் கொஞ்சமாக வீசி வருகிறது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து வெப்பம் அதிகரித்து வருகிறது.
கிழக்குப் பகுதியில் இருந்து வரும் ஈரப்பதம் காரணமாக வெப்பம் அதிகரித்து உடலில் வியர்வை அதிகளவில் வெளியேறும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கீழ்த்திசை காற்று இல்லாததால் வருகிற நாட்கள் வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கும். பருவத்திற்கு இயல்பான வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வேலூர், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. வேலூரில் அதிக பட்சமாக 104.72 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருச்சி, திருப்பத்தூர் மற்றும் கரூர் பரமத்தியில் 104 பாரன்ஹீட் வெப்பமும், சேலத்தில் 103.1 பாரன்ஹீட் வெப்பமும், பாளையங்கோட்டையில் 102.02 பாரன்ஹீட் வெப்பமும் , மதுரையில் 102.56 பாரன்ஹீட் வெப்பமும், தரும புரியில் 102.2 பாரன்ஹீட் வெப்பமும், சென்னையில் 101.12 பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.
சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 2006-ம் ஆண்டு 107.78 பாரன்ஹீட் பதிவானது. அதன் பிறகு, தற்போது சென்னையில் பதிவாகியுள்ள 101.12 பாரன்ஹீட் தான் கடந்த எட்டு ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பமாகும்.
கடந்த பத்தாண்டுகளில் ஏப்ரல் மாதத்தின் அதிகபட்ச வெப்ப நிலை 14-ம் தேதிக்கு மேல் தான் பதிவாகியுள்ளது (2010-ம் ஆண்டு தவிர). ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி 101.12 பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் வெயில் இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதங்களில் இதுவரை அதிக பட்ச வெப்ப நிலையாக 1908-ம் ஆண்டு 109.04 பாரன்ஹீட் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இயல்பைவிட வெப்பம் அதிகரிப்பதால், இந்தக் கோடை காலத்தில் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும். கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும் போது உப்புச் சத்துப் பற்றாக்குறையும் நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்படுகின்றன. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்படலாம்.
வெயிலின் தாக்கத்தால் வேர்க்குரு, அரிப்பு, தேமல், மணல்வாரி அம்மை, வயிற்றுப் பிரச்சினை போன்றவை ஏற்படும். தண்ணீரை அதிகம் குடிக்காதவர்களுக்குச் சிறுநீரகக் கல் வரக் கூடும். உச்சி வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கு வலிப்பு வருவதற்கு சாத்தியம் உள்ளது.
எனவே வெப்ப தாக்கத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். சி.ஆர்.எஸ். கரைசல் பருக வேண்டும். மேலும், எலுமிச்சை, தர்ப்பூசணி, கிர்ணி பழச்சாறுகள், மோர், லஸ்ஸி போன்றவைகளும் பருக வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள திராட்சை, வெள்ளரிக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வீடுகளில் சூரிய ஒளி நேரடியாக படும்படி உள்ள ஜன்னல், கதவுகள் ஆகியவற்றை திரைச்சீலைகளால் மூட வேண்டும். இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வருமாறு ஜன்னல்களைத் திறந்து வைத்துக் கொள்ளலாம். தினமும் காலை, மாலை அல்லது இரவில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
வெளியில் வேலை செய்யும்போது அடிக்கடி மறக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டும். தலையில் அவசியம் துண்டு கட்டிக் கொள்ள வேண்டும். தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது. களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்தால் வெயில் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.