ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி சிறுவளையம் கிராமத்தில், நெல் நாற்று நடவுச்செய்யும் பணியில் மிகுந்த ஆர்வத்துடன் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுபற்றி அவர்களுக்கு வேலைக் கொடுத்த நிலத்தின் உரிமையாளரும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில இளைஞரணித் தலைவருமான சுபாஷ் கூறுகையில், ‘‘மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள் ஒன்பது பேர், பெண்கள் ஒன்பது பேர் என மொத்தமாக 18 பேர் நடவுப் பணிக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள், முழுக்க முழுக்க விவசாய வேலைகளை மட்டுமே செய்யக் கூடியவர்கள். சென்னையிலுள்ள ஏஜென்ட் ஒருவர் மூலம் 18 பேரையும் என்னுடைய நிலத்துக்கு அழைத்து வந்துள்ளேன். ஏக்கருக்கு 4,500 ரூபாய் கூலியாக வழங்குகிறேன்.

18 பேரும் கூலியை பிரித்து எடுத்துக்கொள்கிறார்கள். அதோடு, ஒரு ஏக்கர் நடவுக்கு 5 கிலோ அரிசியையும் சமைத்து சாப்பிடுவதற்காகக் கொடுக்கிறேன். நிலத்திலேயே தங்குவதற்கு ஷெட் அமைத்து, கியாஸ் சிலிண்டரையும் கொடுத்துள்ளேன். எனக்குச் சொந்தமாக 15 ஏக்கர் நிலமும், குத்தகைக்கு 10 ஏக்கர் நிலமும் இருக்கிறது.
சித்திரைப் பட்டம் என்பதால், ஆந்திர ரகத்தை குறுகிய காலப் பயிர் சாகுபடி செய்கிறேன். இவர்கள் கடந்த வாரம்தான் வந்தார்கள். முதல் நாளிலேயே நான்கு ஏக்கர் நடவு செய்து முடித்துவிட்டனர். அடுத்த நாள் விட்டுவிட்டு இரண்டு, மூன்று ஏக்கர் நடவு செய்கிறார்கள்.

வெயில் ஒருப் பக்கம் வாட்டுவதால், கொஞ்சம் சிரமமடைகிறார்கள். மற்றபடி அசௌகரியமாகக் கருதாமல், சிறப்பான முறையில் நடவு செய்கிறார்கள். என்னுடைய நிலத்தில் நடவுப் பணி முடிந்ததும் உள்ளூரில் அடுத்து யார் அழைக்கிறார்களோ, அங்குச் செல்லவிருக்கிறார்கள். நிறைய விவசாயிகள் இப்போதே தேடி வந்து, புக்கிங் செய்துவிட்டுப் போகிறார்கள். அந்த அளவுக்கு சிரமப்படாமல், சிறப்பான முறையில் வேளாண் பணியை கையாள்கிறார்கள். தினமும் 700 ரூபாய் முதல் 1,000 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.

யாரையும் நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. என் கருத்தையும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சிலர் அரசியலுக்காக வடமாநிலத் தொழிலாளர்களை தவறாக சித்திரித்து துரத்தப் பார்க்கிறார்கள். அவர்களோ கூலி வேலைக்காகத்தான் வருகிறார்கள். அதுவும் நம்மால் செய்ய முடியாத, நாம் செய்யாத வேலையைத்தான் செய்கிறார்கள்.

நம்முடைய ஆட்களை நடவுப் பணிக்கு அழைத்து வந்தால், ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கொடுக்க வேண்டும். காலையில் குடிக்க கஞ்சி, மதியம் சாப்பாடு, ஆண் ஆள் என்றால் மாலையில் குவார்ட்டர் வாங்கித் தர வேண்டும் என்கிறார்கள். நடவுப் பணி முழுமையாக முடிந்தப் பின்னர் கறிச்சோறு ஆக்கிப் போட வேண்டும். கூலி ஆட்களை அழைத்து வந்த மேஸ்திரி என்ற குழுத் தலைவரை தனியாகக் கவனிக்க வேண்டும். இவ்வளவு செய்தும் வேலை சீக்கிரம் முடியாது. ஆனால், கடந்த வாரம் வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 18 பேரும், மடமடவென 25 ஏக்கர் நிலத்திலும் நடவு பணியை முடித்துவிட்டார்கள். விவசாயியும் வாழ வேண்டும் என்றால், அவனும் லாபம் பார்க்க வேண்டும். அதில் தவறேதுமில்லை’’ என்று சொல்லி முடித்தார்.