தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூலமாக ஆண்டுதோறும் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. பண்டிகை காலங்களில் இலக்கு வைத்து மது விற்பனை நடைபெறுகிறது.
இந்நிலையில், மே தினத்தையொட்டி, ராணிப்பேட்டையில் வருகிற ஒன்றாம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற ஒன்றாம் தேதி மே தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனை சார்ந்த பார்கள், எஃப்எல் 3 உரிமம் பெற்ற கிளப்-கள் உள்ளிட்ட அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.
இவற்றில் எந்தவித மது விற்பனையுடன் நடைபெறக்கூடாது. தடையை மீறி சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
மே 1-ம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியானதையொட்டி, முந்தைய நாளே மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொள்ள 'குடிமகன்'கள் திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில், அதிக மது பாட்டில்கள் வாங்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கும் வேலைகளிலும் சிலர் இறங்கியுள்ளனர். சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.