A coconut tree caught fire due to lightning strike
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் நேற்று பிற்பகல் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமாா் 4 மணிக்கு மேல் திடீரென பலத்த சூறை காற்று வீசத்தொடங்கியது. தொடா்ந்து அவ்வப்போது இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது. அப்போது பலத்த சத்தத்துடன் பாணாவரம் காந்தி சிலை எதிரே ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலருக்கு சொந்தமான வீட்டின் பின்புறம் இருந்த தென்னைமரத்தில் மின்னல் தாக்கியதில் மரத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது.

இது குறித்து தகவல் அறிந்த கிராம நிா்வக அலுவலா் முரளிமனோகர், கிராம உதவியர் வில்சனை அழைத்து மேலும் தீ பரவாமல் தடுத்திட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதனிடையே இத்தகவல் அறிந்து வந்த பாணாவரம் போலீசார், சோளிங்கா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.

தகவலின் பேரில் நிலைய அலுவலர் குமரவேல் தலைமையில் வந்த மூன்று போ் கொண்ட குழுவினா் தென்னைமரத்தில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனா். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.