ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா சீக்கரஜ புரம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 46). ஆற்காடு மாசா பேட்டை அண்ணா நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் கணபதி என்பவரது 9 வயது மகள் நகராட்சி பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் அன்று கலர் உடையில் பள்ளிக்கு வந்துள்ளாள்.

ஆசிரியர் நித்தியானந்தம் ஏன் கலர் உடையில் வந்தாய் என கேட்டுள்ளார். இதை மனதில் வைத்துக்கொண்டு மாணவியின் தந்தை கணபதி நேற்று பள்ளிக்கு வந்த ஆசிரியர் நித்தியானந்தத்தை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் கையில் வைத்திருந்த பிளேடை காட்டி ஒழித்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த ஆசிரியர் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து ஆசிரியர் நித்தியானந்தம் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியின் தந்தை கணபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.