ஆற்காடு அருகே அண்ணனை தாக்கிய குடும்பத்தினரை சாம்பாரில் விஷம் கலந்து கொல்ல முயன்ற 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்காடு அடுத்த கிளாம்பாடியை சேர்ந்தவர் சீனிவாசன் (39), கூலித்தொழிலாளி. இவரது மனைவி குஷ்பூ (35) தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 20ம் தேதி காலை தம்பதி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று மாலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைத்து 15 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இவர்கள் அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டின் அருகே வந்து சென்றதாக கூறினர்.

இதைத்தொடர்ந்து சீனிவாசன் சிறுவனை தேடியபோது தலைமறைவானது தெரிந்தது. இதையடுத்து, சிறுவனின் அண்ணனை பிடித்து விசாரித்த போது தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தனது தம்பி கடந்த சில நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என கூறினாராம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் குழந்தைகளுக்கு சாப்பாடு செய்து வைத்து விட்டு தம்பதி வேலைக்கு சென்றனர். இதற்கிடையே சீனிவாசனின் தங்கை லட்சுமி, குழந்தைகளுக்கு சாப்பாடு பரிமாற வீட்டிற்கு வந்தபோது சாம்பாரில் ஒருவிதமான வாடைவந்துள்ளது. உடனே சாம்பாரை வெளியே கொட்டியுள்ளார். அப்போது, அங்கிருந்த வாத்துக்கள் 'சாம்பாரை சாப்பிட்டு இறந்தது.

இதில், அதிர்ஷ்டவசமாக சீனிவாசன் குடும்பத்தினர் உயிர் தப்பினர். மேலும், வீட்டின் அருகே இருந்து சிறுவன் ஓடியதும், வாத்துகள் இறந்து கிடப்பது குறித்து லட்சுமி, சீனிவாசனிடம் கூறினார். இதையடுத்து, சீனிவாசன் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திருடிய 15 ஆயிரத்தில் செல்போன் வாங்கியதும், தன்னை பிடிப்பதற்காக அண்ணனை தாக்கிய தால் உணவில் விஷத்தை கலந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.