ராணிப்பேட்டை காரை லேபர் பள்ளி சாலையை சேர்ந்தவர் வார்டு கவுன்சிலர் நரேஷ்குமார்(36). இவர், கடந்த 12ம் தேதி காரை கூட்ரோடு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் வழிமறித்துள்ளார். பின்னர், கத்தியை காட்டி மிரட்டி நரேஷ்குமாரை தாக்கியதுடன் அவரிடம் இருந்த ₹9,800 ரொக்கம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் நகைகளை பறித்து கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நரேஷ்குமார் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ராணிப்பேட்டை காரை அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்த சுபாகர் (எ) சுபாஷ்(33) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு தொடர்ந்து குந்தகம் செய்து வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், சுபாகர்(எ) சுபாஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கெலெக்டர் வளர்மதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.