Husband and wife arrested for cheating by claiming to give groceries
ராணிப்பேட்டை அருகே உள்ள தண்டலம் பகுதியை சேர்ந்தவர் பிரபா தேவி (வயது 36). கணவரை இழந்த இவர் நேற்று ராணிப்பேட்டை போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் ராணிப்பேட்டை சீனிவாசன் பேட்டையை சேர்ந்த மீரா என்பவர் இந்திய தேசிய கிராம தொழிலாளர்கள் சம்மேளன தொழிலாளர்கள் சேவை சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். இவர் தனது அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தால் விபத்து காப்பீடு, இயற்கை மரண உதவி, ஈமச்சடங்கு உதவி, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி, 60 வயது கடந்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படும். உறுப்பினராக சேர ரூ.700 கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார்.
அதை நம்பி நான் ரூ.700 கொடுத்தேன். இதற்கு ஒரு அடையாள அட்டையை என்னிடம் வழங்கினார். இதே போல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல ஊர்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து உறுப்பினராக சேர பணம் பெற்றுக்கொண்டு தனியாக பதிவேடு பராமரித்து வருவதாக மீரா என்னிடம் கூறினார்.
இந்தநிலையில் அரசு பொங்கல் பரிசு வழங்குவது போல், இந்த சங்கத்தின் மூலம் மளிகை பொருட்கள் கொடுப்பதாகவும் அதற்கு ரூ.100 கட்ட வேண்டும் என்று கூறி என்னிடம் பெற்றுக் கொண்டார். பின்னர் ஒரு வாரம் கழித்து மளிகை பொருட்களை வாங்க மேலும் ரூ.200 கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதனையும் நான் செலுத்தினேன்.
இந்தநிலையில் அவரது அலுவலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து கிடைக்கும் நிதியில் ஒருவருக்கு ரூ.1,500 வாங்கித் தருகிறேன். அதற்கு ரூ.200 கட்ட வேண்டும் என்று கூறினார்கள். அதையும் நான் கட்டினேன். எனக்கு 635 என்ற எண் கொண்ட டோக்கன் வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி ராணிப்பேட்டை -அம்மூர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் வந்து என்னை மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்கள். அதன்படி அவர்கள் குறிப்பிட்ட திருமண மண்டபத்திற்கு சென்றபோது, என்னை போல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் அங்கு கூடியிருந்தார்கள்.
கூட்டம் நடைபெற்ற போது சுமார் 10 நபர்களுக்கு மட்டுமே மளிகை பொருட்கள் கொடுத்தார்கள். அந்தப் பொருட்களை நானும் என்னை போல் அங்கு வந்தவர்களும் பிரித்துப் பார்த்தபோது அதன் மதிப்பு ரூ.200-க்கும் குறைவாக இருந்ததால் மீராவை சந்தித்து நாங்கள் கொடுத்த 500 ரூபாயை திருப்பித் தருமாறு கேட்டோம். அதற்கு மீராவின் கணவர் தயாளன் பரிசுப் பொருட்களின் தொகுப்பு கூட்டுறவு பண்டக சாலையிலிருந்து 2 நாட்கள் கழித்து எடுத்துக் கொடுப்பதாக தெரிவித்தார். என்னைப்போலவே பல்வேறு நபர்களிடமிருந்து ரூ.500 முதல் ரூ.2,000 வரை பணம் வாங்கிக்கொண்டு மீரா என்ற முத்திரையுடன் டோக்கன் வழங்கி பல லட்சம் ரூபாய் ஏமாற்றி மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
நாங்கள் மீராவிடம் பணத்தை கேட்ட போது, கணவன்,மனைவி இருவரும் எங்களை அசிங்கமாக பேசி, பணத்தை திருப்பி கொடுக்க முடியாது, பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்தால் உங்களை ஒழித்து விடுவோம் என மிரட்டினார்கள். கொலை மிரட்டல் விடுத்த மீரா மற்றும் அவரது கணவர் தயாளன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மீரா (38), அவரது கணவர் தயாளன் (47) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.