அரசு வேலை வாங்கித்தருவதாக ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பெயரில் வாலிபரிடம் பணமோசடி செய்த மர்மநபர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

குறைதீர்வு முகாம்


வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார்களை மனுக்களாக அளித்தனர்.

காட்பாடியை அடுத்த காளாம்பட்டு பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்ற பட்டதாரி வாலிபர் அளித்துள்ள மனுவில், நான் நாய்கள் வளர்த்து அதனை விற்பனை செய்து வருகிறேன். என்னிடம் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் எனக் கூறி ஒருவர் தொடர்பு கொண்டார். தொடர்ந்து அவர் அரசு வேலை வாங்கித் தருவதாக என்னிடம் கூறினார். இதற்காக ரூ.75 ஆயிரம் கேட்டார். நானும் அதை நம்பி, அந்த நபர் கூறிய வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பினேன்.

அதன் பிறகு அவர் விலை உயர்ந்த நாய் ஒன்றையும் வேறு நபர் மூலமாக வாங்கிச் சென்றார். ஆனால் அந்த நபர் எனக்கு வேலை வாங்கித் தரவில்லை. அதற்கான பணத்தையும் திருப்பி தரவில்லை. பின்னர் தான் அந்த நபர் என்னிடம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி உள்ளார்.