அரட்டை கச்சேரி நடக்கிற அறையில் கூட தூங்கிவிடலாம், ஒரு குறட்டை ஆசாமியுடன் தூங்குவது இயலாத காரியம் எல்லாமே, நாமும் தூங்க ஆரம்பித்து குறட்டை விடும்வரைதான். பெரும்பாலான கல்யாண வீடுகளில் இந்த காட்சியை பார்க்கலாம். இரவு 11 அல்லது 12 மணிக்கு பேன் இருக்கும் இடமாக படுத்துக்கொள்ளலாம் என்று தேடியலைந்து படுக்கும் போது பக்கத்திலேயே ஒருவரோ, இருவரோ தூங்குவது மட்டுமில்லாமல், நமக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனால் குறட்டையையும் விட்டுக்கொண்டே தூங்குவார்கள்.

ஒருவரது குறட்டை குளவியின் ஓசையை போல என்றால், இருவர் சேர்ந்து விட்டால் இரட்டை நாயனம். அதற்கும் மேல் என்பது மழைக்காலத்துக் குட்டையில் கூடியிருக்கும் தவளைகளின் கோஷ்டிகானம் போல ஆகிவிடும். ஆயுள் தண்டனையை விடக் கொடியது குறட்டையாளர்களின் கூட்டு.

தேவைக்கு மேல் உடல் எடை அதிகரிக்கும்போதும், வயது ஏற ஏறவும் குறட்டை ஏற்படுகிறது. ஒருவித ஒவ்வா மையாலும் சைனஸ் பிரச்சினையாலும், மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச்சுவர் வளைவதாலும், தொண்டையிலும் அடிநாக்கிலும் தசை நார்கள் வலுவிழப்பதாலும், குடிப்பழக்கத்தாலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், தொண்டையில் உள்ள சதை தடிப்பதாலும், குழந்தைகளுக்கு டான்சில் அல்லது அடினாய்டுகள் ஏற்படுவதாலும்' உள்நாக்கு நீண்டு காற்று செல்லும் வழியை தடுப்பதாலும் குறட்டை ஏற்படுகிறது.

குறட்டை விடுவதால் அவர்களாலேயே தொடர்ந்து தூங்க முடியாது. அப்படி வரும்தூக்கமும் ஆழ்ந்ததூக்கமாக இருக்காது.தங்களுக்குத் தூக்கக் குறைவு ஏற்படுகிறது என்பதை சம்பந்தப்பட்டவர் களாலேயே உணரவும் முடியாது.அடுத்தநாள் வேலைக்கு செல்லும்போது அல்லது வேலையில் இருக்கும்போது கண்ணை செருகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய தசைகள் விரிவடையும். சில வேளைகளில் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றுக்கும் இது காரணமாக அமையலாம்.