வாலாஜாவில் போலி பட்டா தயாரித்து நிலம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.
வாலாஜாவை சேர்ந்த அமர்நாத்(45) என்பவர் நேற்று ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எனக்கு சொந்தமாக வாலாஜா உப்புகாரத் தெருவில் நிலம் உள்ளது. இந்நிலையில், எனது நிலத்துக்கு சில நபர்கள் போலி பட்டா தயாரித்து பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து வேறு நபர் ஒருவரின் பெயருக்கு சொத்தை பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் மேற்கண்ட சொத்துகள் குறித்து தடை மனு அளித்துள்ளேன். இந்நிலையில், இதுதொடர்பாக புகார் அளித்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டுகின்றனர்.
எனவே, எனது சொத்தின் மீது போலி பட்டா தயாரித்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.