அரக்கோணம் அருகே, விசாரணைக்கு பயந்து, வி.ஏ.ஓ., கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
VAO attempted suicide by slitting his neck near Arakkonam


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முகமது இலியாஸ், 38; இவர், அரக்கோணம் அருகே மின்னல் கிராமத்தில், வி.ஏ.ஓ., வாக பணியாற்றி வந்தார். கடந்த மாதம், 25ல் ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்தபோது தவறுதலாக, வேறு ஒருவரது பெயருக்கு மாறிவிட்டது.

சம்மந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர், இது குறித்து அரக்கோணம் ஆர்.டி.ஓ., பாத்திமாவிடம் புகார் செய்தார். இது குறித்து வி.ஏ.ஓ., முகமது இலியாசிடம், வருவாய் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அதில் அந்த பட்டாவை, 10 நாளில் மாறுதல் செய்து கொடுக்கா விட்டால், வி.ஏ.ஓ., முகமது இலியாஸ் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்கு பயந்து, மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று காலை அவரது வீட்டில் குளிக்கச் சென்றபோது, கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் கதவை உடைத்து அவரை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், மேல் சிகிச்சைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.