ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
₹5000 reward for rescuing accident victims and admitting them to hospital collector information

ராணிப்பேட்டை மாவட்டம், அரசாணை எண்173ன் படி சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நபரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து உயிர் காப்பு செய்பவர்களுக்கு அரசு பரிசுத்தொகை ₹5ஆயிரம் மற்றும் நற்கருணைவீரன் என்ற நற்சான்றும் வழங்கப்படும்.

இத்திட்டம் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவரை காப்பாற்றும் நோக்கிலும், தேவையற்ற அச்சங்களை அகற்றிடவும் பொதுமக்களிடையே விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிடும் மனப் பான்மையை ஏற்படுத்தும் வகையிலும் உருவாக்கப் பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவரின் உயிரை காக்கும் வகையில் உடனடியாக செயல்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய நேரத்தில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க உதவிடும் தனிமனிதனை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு பரிசுத்தொகை ₹5 ஆயிரம் மற்றும் நற்கருணைவீரன் என்ற பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் ஒரே ஆண்டில் ஒரு நபருக்கு அதிகபட்சம் 5 முறை இச்சான்று மற்றும் ஊக்கத் தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி மாநில அளவிலான கண்காணிப்புக்குழு பரிந்துரையின் பேரில் 3 தகுதி வாய்ந்த நபர்களுக்கு தேசிய அளவிலான விருது மற்றும் 1 லட்சம் ரொக்கப்பரிசு பெறவும் பரிந்துரைக்கப்படும். இத்திட்டம் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வரை செயல்முறையில் இருக்கும்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ மனையில் சேர்க்கும் நபர்கள் பரிசுத்தொகை மற்றும் நற்ச்சான்றிதழை பெற சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர் அல்லது வட்டார போக்குவரத்து அலுவலரை அணுகலாம். எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர்காக்கும் சிகிச்சை பெற உதவிட வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்தில் இறப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.