காட்பாடி தாலுகா, பிரம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 42) இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள டிராக்டர் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த மோகன் இரவு தனிஅறையில் தூங்கினார். மறுநாள் காலையில் குடும்பத்தினர் கதவை தட்டிய போது கதவு திறக்கப்படவில்லை. அதனால் அக்கம்பக்கத்தினர் வந்து கதவை உடைத்து பார்த்தனர். அங்கு மோகன் தூக்குப் போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.
மோகன் தங்கி இருந்த அறையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் மோகன், தனக்கு கம்பெனியில் உயர் அதிகாரிகள் சிலர் மன உளைச்சல் ஏற்படுத்தியதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும், வேறு எந்த காரணமும் இல்லை என எழுதியுள்ளார்.
இதனை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்தில் சக தொழிலாளி தற்கொலைக்கு காரணமான தொழிற்சாலையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொழிற்சாலை வளாகத்தில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.