பாணாவரம் அருகே தாய் மற்றும் பாட்டி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் பாட்டி இறந்த நிலையில் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மனநலம் பாதிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா பாணாவரத்தை அடுத்த மேலேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 55). இவர் அங்குள்ள ஒருவரது விவசாய நிலத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி யசோதா (50). இவர்களது மகன் அசோக்குமார் (24). இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கபட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். மேலும் யசோதாவும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
அசோக்குமார் அவ்வப்போது குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பழனி வழக்கம்போல காவல் காக்கும் பணிக்கு சென்றுவிட்டார். அசோக்குமார், யசோதா, பழனியின் தாய் வள்ளியம்மாள் (80) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
தீவைப்பு
இந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்த தாய் யசோதா, பாட்டி வள்ளியம்மாள் ஆகியோர் மீது நேற்று அதிகாலை தீ வைத்த அசோக்குமார் தன் மீதும் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
தீயில் கருகிய 3 பேரும் வலி தாங்க முடியாமல் கூச்சலிட் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று அணைத்து 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலனஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பாட்டி, வாலிபர் பலி
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வள்ளியம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அசோக்குமார், யசோதா ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அசோக்குமார் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். யசோதா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
தாய் மற்றும் பாட்டியை எரித்து விட்டு, வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.