வாலாஜா- ராணிப்பேட்டை சாலையில் 5ஜி செல்போன் டவர் அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தில் புதிதாக தனியார் செல்போன் 5ஜி டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல இடங்களில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து கோரிக்கை மனு அளித்தனர்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறி அப்பகுதி மக்கள் வாலாஜா- ராணிப்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியல் செய்தனர்.
அப்போது, அரசு தலைமை மருத்துவமனை எதிரே 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு, வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அங்கு 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.