பட்டா மாற்றம் செய்ய 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆற்காடு தாசில்தார், டிரைவர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
Arcot tahsildar, driver arrested for accepting Rs 15,000 bribe

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அடுத்த செய்யானந்தம் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன், 50. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மாங்காட்டில் இவருக்கு 51 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது. தரிசு நிலம் மேம்பாட்டு திட்டத்தின் 1982ம் ஆண்டு இந்த நிலம் அளவீடு செய்யப்பட்ட போது தவறுதலாக வேறு ஒருவர் பெயருக்கு மாற்றப்பட்டது. அதை திருத்தம் செய்து தன் பெயருக்கு மாற்றித்தரும்படி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சகாதேவன் மனு கொடுத்தார்.

இந்த மனுவின் மீது ஆற்காடு தாசில்தார் சுரேஷ் விசாரணை நடத்தினார். அப்போது பட்டாவில் திருத்தம் செய்து பெயர் மாற்றம் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். கடைசியில் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெயர் மாற்றித்தருவதாக தாசில்தார் சுரேஷ் கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சகாதேவன் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து (14-ம் தேதி) இரவு 6:00 மணிக்கு போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயன பவுடர் தடவிய 15 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு ஆற்காடு தாசில்தார் அலுவலகத்திற்கு சகாதேவன் வந்தார். அங்கு வைத்து 15 ஆயிரம் ரூபாயை தாசில்தார் சுரேஷிடம், 42, கொடுத்தார். அதை வாங்கி அவரது ஜீப் டிரைவர் பார்த்தீபனிடம், 48, கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேசன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி குழுவினர் கையும், களவுமாக இருவரையும் பிடித்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட தாசில்தார் சுரேஷ், அவரது ஜீப் டிரைவர் பார்த்தீபன் ஆகியோர் வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.