ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள தென்நந்தியாலத்தைச் சேர்ந்தவர் மணி (58). கூலித் தொழிலாளி. இவர் அங்குள்ள அரசு டாஸ்மாக் கடை பகுதியில் காலி பாட்டில்களை சேகரித்து காயலான் கடையில் விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் மது குடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது,

இந்நிலையில் நேற்று காலை தென்நந்தியாலம் பகுதியில் உள்ள தேவாலயம் பகுதிக்கு வந்து அங்குள்ள வர்களிடம் தண்ணீர் வாங்கி குடித்துள்ளார். மேலும், தனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே சிறிது நேரம் இங்கே படுத்துக்கொள்வதாக கூறி தூங்கி உள்ளார். நீண்ட நேரமாக எழுந்து கொள்ளாததால் அங்கிருந்தவர்கள் மணியை எழுப்பி உள்ளனர். ஆனால் எந்த விதமான அசைவும் இல்லாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்து அவர்கள் இது குறித்து ரத்தினகிரி போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணியின் சடலத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது மகன் கருணாகரன் ரத்தினகிரி போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரனை செய்து வருகிறார்.