வேலூர் மாவட்டம், குடியாத்தம் வஉசி பகுதியை சேர்ந்தவர் செந்தில்(42), தென்னை மரம் ஏறும் கூலி தொழிலாளி.
இவர் ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் கடந்த 3 நாட்களாக தென்னை மரம் சீரமைப்பு பணி மற்றும் தேங்காய் அறுக்கும் வேலையை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்த போது கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில், படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் செந்தில் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து இறந்தவரின் மனைவி சங்கீதா காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.