ராணிப்பேட்டை மாவட்டத்தில் திரௌபதி அம்மன் கோயிலில் உற்சாகமாக நடக்க வேண்டிய கோயில் திருவிழா சோகத்தில் முடிந்துள்ளது. கோயில் திருவிழாவில் நடந்த கிரேன் விபத்து அங்குச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கிரேன் விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி வட்டம் கீழ்வீதி கிராமத்தில் திரௌபதி கோயிலில் மயிலர் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் அந்த ஊரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே திருவிழாவின் போது கிரேன் கவிழ்ந்து திடீரென விபத்து ஏற்பட்டது. கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை செலுத்த முயன்ற போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் முதலில் இருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், இப்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருவிழாவுக்கு வந்திருந்த கீழ்வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து (42), ஐஸ் வியாபாரி பூபாலன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும், கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த கீழ்வீதியைச் சேர்ந்த +2 மாணவர், 17 வயதே ஆன ஜோதி பாபு என்பவரும் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் விபத்தில் ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர இந்த விபத்தில் பெண் குழந்தை உட்பட 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அரக்கோணம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தோருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் கோயிலில் பொதுமக்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது தெளிவாகத் தெரிகிறது. கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை அணிவிக்க முயல்கின்றனர். கிரேன் மீது சிலர் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் கிரேன் இடது பக்கம் சாய்ந்ததில் இந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 17 வயதே ஆன சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளான். அவன் கிரேனில் மேலே தொங்கிய சிறு பகுதியில் நின்று இருந்ததாகக் கூறப்படுகிறது விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். எந்தவொரு அனுமதியும் இல்லாமல் கிரேன் மூலம் மாலை அணிவிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.