ஆற்காடு அருகேவீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் திடீரென குண்டுவெடித்து பலியானார். அவரது மகன் படுகாயமடைந்தார்.
நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிளைவ் பஜார் பகுதியில் 8-க்கும் மேற் பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் முருகன் (வயது 41) என்பவர், காட்டுபன்றிகளை வேட்டையாடுவதற்காக தனது வீட்டில் சட்ட விரோதமாக நாட்டு வெடி குண்டுகள் தயார் செய்ததாக கூறப்படுகிறது. நேற்று நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது திடீரென வெடித்துள்ளது.
இதில் முருகன் படுகாயம டைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் பகவதி (21) படுகாயம் அடைந்தார். அவரை ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் முருகனின் வீடும் சேதமானது.
கலெக்டர் பார்வையிட்டார்
இது குறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், ஆற்காடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெடி விபத்து குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், துணை போலீஸ் சூப்பரண்டு பிரபு உள்பட பலர் உடன் இருந்தனர்.
இந்தவெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.