வேலூர்: இன்ஸ்டா காதல்; திருமணம் - கர்ப்பிணி மனைவியைக் கொன்று மலையிலிருந்து உருட்டிவிட்ட எஸ்.ஐ மகன் 


வேலூர் அருகிலிருக்கும் பாலமதி மலை உச்சியில், ‘குழந்தை வேலாயுதபாணி’ திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் இருந்து 100 அடிக்கு கீழிருக்கும் பாறைகளின் இடுக்கு பள்ளத்துக்குள் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போதுதான் தெரிந்தது, அந்தப் பெண் கொலைச் செய்யப்பட்டு மலையில் இருந்து உருட்டிவிடப்பட்டிருக்கிறார் என்று!

கட்டையால் முகம், தலையில் கொடூரமாக தாக்கியிருப்பதும், பாட்டிலால் கழுத்தை குத்திக் கிழித்திருப்பதும் தெரியவந்தது. முகம் வீங்கி அடையாளம் காண முடியாதபடி விகாரமாகக் காணப்பட்டது. கழுத்தில் தாலி, கால் விரலில் மெட்டி அணிந்திருப்பதை வைத்து அவர் திருமணம் ஆனவர் என்று முடிவுக்கு வந்தது போலீஸ்.

கொலைச் செய்யப்பட்ட பெண் சுடிதார் அணிந்திருந்தார். பெண் போலீஸாரைக் கொண்டு ஆய்வு செய்த போது, மார்புப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடித்தத்தை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், கொலைச் செய்யப்பட்ட பெண் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த 23 வயதே ஆகும் குணப்பிரியா என்பது தெரியவந்தது. அவரின் உடையில் சிக்கிய கடிதத்தை அவரே எழுதி மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அதில், ‘‘என் பெயர் குணப்பிரியா. நான் சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைச் செய்து வந்தேன். ஓராண்டுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் வேலூரைச் சேர்ந்த கார்த்தி என்பவனுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து, கடந்த ஆண்டு காட்பாடி அருகேயுள்ள வள்ளிமலை முருகர் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்களை இருத்தரப்பு பெற்றோர்களுமே ஏற்றுக்கொள்ளவில்லை.

எங்கள் திருமணத்தில் அவனது நண்பர்கள் 4 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். தற்போது, ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். கார்த்தி வேலைக்குப் போவதில்லை. எனக்கு சாப்பாடும் வாங்கித் தருவதில்லை. என் அப்பா, அம்மாவுக்கு சொல்லாமலேயே கல்யாணம் செய்ததற்கு நிறைய கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். இவனோடு வாழ்வதற்கு சாவதே மேல். என் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு காரணம் கார்த்தி மட்டுமே!’’ என்று குறிப்பிட்டிருந்திருக்கிறார் குணப்பிரியா.

முன்கூட்டியே தனது காதல் கணவனால் தனக்கு நேரப் போகும் விபரீதம் குறித்து அந்தப் பெண் உணர்ந்ததாலேயே இப்படியான கடிதத்தை எழுதி உடைக்குள்ளேயே மறைத்து வைத்திருந்திருக்கிறார் என்கிறது போலீஸ். இந்தக் கடிதமே கொலையாளியை எளிதாகக் கண்டுபிடிக்கவும் காரணமாக அமைந்தது. அந்தக் கார்த்தி யாரென்று விசாரித்தபோது, வேலூர் வடக்குக் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் என்பது தெரியவந்தது.


இதையடுத்து, அவரை தேடிப்பிடித்து கைது செய்த போலீஸார், விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். போலீஸாரிடம் கார்த்தி, ‘‘என்னை விட 1 வயது மூத்தவர் குணப்பிரியா. எங்களுக்குள் இன்ஸ்டாகிராம் மூலம்தான் பழக்கம் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து அழைத்துவந்து, பாலமதி மலை அடிவாரத்திலுள்ள நம்பிராஜபுரம் கிராமத்தில் வசிக்கும் என் நண்பன் வீட்டில் தங்க வைத்தேன். என் பெற்றோரும், அவளது பெற்றோரும் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தும் அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை. இதனால், எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த மூன்று வாரத்துக்கு முன்பு குணப்பிரியாவை கடலூர் குள்ளஞ்சாவடியிலுள்ள அவளது சித்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். ‘உன் சித்தி வீட்டிலேயே இரு. நான் வாடகைக்கு வீடு எடுத்துவிட்டுச் சொல்கிறேன். அப்புறம் வா..’ என்றேன். அவளிடம் போன் கிடையாது. அவளது சித்தி போனில்தான் பேசி வந்தாள். மூன்று வாரம் ஆன நிலையில், 25-ம் தேதி இரவு திடீரென வேலூர் கிளம்பி வந்துவிட்டாள்.

அன்று இரவு 12 மணி இருக்கும். வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அவளை எனது பைக்கில் அழைத்துக்கொண்டு, மீண்டும் பாலமதி மலை அடிவாரத்திலுள்ள எனது நண்பன் வீட்டுக்கே சென்றேன். அதற்கு குணப்பிரியா ‘உன் நண்பன் வீட்டுக்கு வரமாட்டேன். உன் அப்பா, அம்மாவிடம் அழைத்துச்செல். நாம் இருவரும் அவர்களுடனேயே இருப்போம்’ என்றாள். இதனால் எனக்குக் கோபம் வந்துவிட்டது. ‘இவளை இனியும் விட்டு வைத்தால் நிம்மதி இருக்காது’ என்று நினைத்து கொலைச் செய்யவும் திட்டமிட்டுக் கொண்டேன். அதன்படி, ‘இரவு நேரம் என்பதால், இப்போது வேண்டாம். நாளை காலை என் அப்பா, அம்மாவிடம் அழைத்துச் செல்கிறேன். இன்று இரவு மட்டும் பாலமதி மலை உச்சியிலுள்ள முருகர் கோயில் அருகில் தங்கிக்கொள்ளலாம்’ என்று சொல்லி, பைக்கிலேயே உட்கார வைத்து அழைத்துச் சென்றேன். கோயில் அருகில் சென்றபோதும், எங்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்கெனவே திட்டமிட்டி அருகில் கிடந்த உடைந்த பாட்டிலை எடுத்து, அவளது கழுத்தில் குத்தினேன். ரத்தம் பீறிட்டு கொட்டியது. அவளும் நிலைக்குலைந்து சரிந்து விழுந்தாள். பின்னர், அருகில் கிடந்த பெரிய கட்டையை எடுத்து முகம், தலையில் சரமாரியாக தாக்கி காயப்படுத்தினேன்.
மூச்சு பேச்சின்றி அவள் கிடந்ததால், ‘செத்து ஒழிந்தாள்’ என்ற சந்தோஷத்தில் மலையில் இருந்து கீழே உருட்டிவிட்டேன். பின்னர், அங்கிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு நண்பன் வீட்டுக்கு வந்துவிட்டேன். விடிந்ததும், 26-ம் தேதி காலை குள்ளஞ்சாவடியிலுள்ள குணப்பிரியாவின் சித்திக்கு போன் செய்து, ‘அவள் வேலூருக்கு வரவில்லையே..!’ என்று சொன்னேன். ‘நேற்று இரவு உனக்குப் போன் செய்துவிட்டு தான் அவள் இங்கிருந்து கிளம்பிச் சென்றாள்’ என்று அவளது சித்தி சொன்னார். நானும் எதுவுமே தெரியாதபடி அவரிடம் நடித்தேன். 26-ம் தேதி மாலையே அவளது சித்தி மீண்டும் எனக்குப் போன் செய்து கேட்டார். ‘அவள் வரவில்லை’ என்ற பதிலையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தேன். 27-ம் தேதியான நேற்று காலை, நானே மீண்டும் அவளது சித்திக்குப் போன் செய்து கேட்டேன். அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. ‘நடிக்கிறீயா, அவளை என்னடா பண்ண..’ என்று கோபமாகக் கேட்டார். ‘நானும் அவள் இன்னும் வரவில்லை’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன். இப்போது மாட்டிக்கொண்டேன்’’ என்று கூறியிருக்கிறார் கார்த்தி.

இதையடுத்து, அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகளை மேற்கொண்டிருக்கிறார்கள் பாகாயம் போலீஸார். இந்தக் கொடூரச் சம்பவம், வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.