வேலூர் அடுத்த அரியூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். ஊராட்சி பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜெகதீஷ் (வயது 14). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மாலை ஜெகதீஷ் அவரது வீட்டில் வளர்க்கும் காளை மாட்டுக்கு தண்ணீர் காட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது மாடு திடீரென ஜெகதீஷை முட்டி தூக்கியது. அதில் அவனது மார்பில் கொம்பு குத்தி காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவன் கீழே சரிந்து விழுந்தான். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவனை மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

இதுகுறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் வீட்டில் வளர்த்து வரும் மாட்டினை எருது விடும் திருவிழாவுக்காக தயார்படுத்தி வந்ததாக தெரிகிறது. அப்போது மாடு அவனை குத்தியதாகவும் கூறுகின்றனர்.

இதுகுறித்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்னரே இது குறித்து தெரியவரும் என்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:-


ஜெகதீஷ்க்கு சொந்தமான ஒரு மாட்டினை அவருக்கு சொந்தமான நிலத்தில் மேய்ப்பதற்காக கொண்டு செல்லும் வழியில் மாடு அவரை முட்டியது. அதில் காயமடைந்த சிறுவனை உடனே நாராயணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

நாராயணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்வானது மாடு விடும் திருவிழாவால் ஏற்பட்டவில்லை. மாடு மேய்க்க கொண்டு செல்லும் போது சிறுவன் இறந்துள்ளான்.

இவ்வாறு அவர் கூறினார்.