சினிமா என்பது பலராலும் விரும்பப்படும் பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. ஒரு படம் முழுமையாக உருவாகுவதற்கு பல துறை சார்ந்த உழைப்பு தேவைப்படுகிறது. படத்தின் வெற்றிக்கு இயக்குனர் மட்டுமின்றி ஒளிப்பதிவாளர், இசை, நடனம் போன்ற பல துறை இயக்குனர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது. குறிப்பாக சினிமாவின் தொடக்க காலங்களில் இருந்தே பாடல், நடன காட்சிகள் பெரும்பாலான ரசிகர்களால் பெரும் அளவில் ரசிக்கப்படுகிறது. நாம் பார்க்கும் 5 நிமிட நடன காட்சிக்கு பின்னால் பல நாட்கள் உழைப்பு உள்ளது. அவற்றை தொகுத்து நடிகர், நடிகைகளை இயக்கி நடனம் செய்ய வைப்பவர்களை நடன இயக்குனர்கள் என்கிறோம். திரைக்கு முன்னால் பார்ப்பவர்களின் அசைவுக்கு பின்னால் இயங்குபவர்களாக செயல்படு கின்றனர். இவர்களுக்கு பக்கபலமாக பல நடன கலைஞர்கள் செயல்படுகின்றனர். நடன கலையின் தோற்றம் என்பது அறியப்பட முடியாத ஒன்றாக இருப்பினும் தொல்பொருள் சான்றுகள், இது பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறுகின்றன. 

மொழிகள் உருவாகுவதற்கு முன்பே சைகை மொழி மற்றும் செயல்திறன் மிக்க தொடர்பு இருந்தது. இதைத்தொடர்ந்து பண்டைய காலங்களில் இருந்து நடன கலாசாரம் தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதை தொல்பொருள் சான்றுகள் காட்டுகின்றன. சமூக கொண்டாட்டங்களிலும் நடன நிகழ்ச்சிகள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன.

காலபோக்கில் புதிய நடன வடிவங்கள் மற்றும் இசையின் தோற்றம் ஏற்பட்டது. இதனை மேலும் ஆராய்ந்த போது பல்வேறு நடன வடிவங்களின் விதிகள் மற்றும் பண்புகள் தெளிவாக தெரிந்தன. நடனம், இசை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் தொடர்பு பின்னி பிணைந்தது.

1900-களில் நடன கலை மற்றும் நடன கலைஞர் என்ற சொற்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் நடனம் உலகம் முழுவதும் வடிவம் பெற்றது. மேடை நாடகங்களில் நடன கலைஞர்களின் பங்களிப்பு அதிகரித்தது. நடனத்திற்கும், இசைக்கும் மொழி தடை இல்லை என்பதால் அனைத்து பகுதி மக்களாலும் இது விரும்பப்பட்டது. பின்னர் சினிமாவில் நடன கலைஞர்களின் பங்களிப்பு அதிகரிததது. இன்றளவும் நடன கலைஞர்களின் பணி என்பது சினிமா துறையில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

இவ்வாறு திரைக்கு பின்னால் பணியாற்றி மக்களை மகிழ்விக்கும் நடன இயக்குனர்கள் மற்றும் நடன கலைஞர்களின் பணியை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ந்தேதி (இன்று) சர்வதேச நடன இயக்குனர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.