மாற்றுத்திறனாளிகள் உலகளவில் சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் சமூகத்தில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. கல்வி போன்ற அறிவு செல்வமும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிதான ஒன்றாகதான் உள்ளது. குறிப்பாக பார்வையற்றவர்களுக்கு வாழ்க்கை சுதந்திரம் மற்றும் தனிமையின் அடிப்படையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் எளிமையாக கல்வி கற்றுக்கொள்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டதே பிரெய்லி முறையாகும். 

பிரெய்லி என்பது ஒவ்வொரு எழுத்தையும், எண்ணையும் குறிக்கும் 6 புள்ளிகளை பயன்படுத்தி அவற்றினை தொட்டுணர்ந்து அறிய கூடிய முறையாகும். இந்த முறை மூலம் இசை, கணிதம் மற்றும் அறிவியல் குறியீடுகளும் கற்றுக்கொள்ள முடியும். முந்தைய காலங்களில் பார்வையற்றவர்களுக்கான கல்வி என்பது கேள்விக் குறியான ஒன்றாகவே இருந்தது. இதற்கு காரணம் பார்வையற்றவர்கள் கல்வி கற்க வேண்டுமாயின் அவர்களுக்கு ஒரு துணை தேவைப்பட்டது. 

இருப்பினும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரை சேர்ந்த லூயிஸ் பிரெய்லி என்பவர் பார்வைத்திறன் சவாலோடும் பள்ளியில் சிறந்த மாணவராக திகழ்ந்தார். இவர் சாதாரண கற்கும் கல்வியானது பார்வைதிறன் குறைபாடுடையவர்களுக்கு சரியான கல்விமுறை இல்லை என்பதை உணர்ந்தார். எனவே பார்வை திறன் அற்ற குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்ந்தார். இங்கு எழுத்துகளை தொட்டு பார்த்து அதன் வடிவத்தை உணர்ந்து படித்து வந்தனர். இந்த முறை மூலம் கல்வி கற்பதற்கு வெகுநேரம் செலவிட வேண்டியிருந்தது. இதற்கென எளிய முறையை கண்டிறிய வேண்டும் என்ற எண்ணம் பிரெய்லிக்கு தோன்றியது. 

இந்தநிலையில் பிரெஞ்ச் ராணுவம் எழுத்து வாயிலான தகவல்களை இரவு நேரத்தில் படிப்பதற்காக பயன்படுத்தும் முறையை பற்றி கேட்டறிந்தார். 12 புள்ளிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த முறையில், காகிதத்தில் புள்ளிகள் மேலெழுந்து மேடு போன்ற ஒரு அமைப்வை கொண்டிருக்கும். இதனை 2 ஆண்டுகளில் முழுமையாக கற்றுக் கொண்ட பிரெய்லி மேலும் இதனை எளிமைப் படுத்த 6 புள்ளிகளை மட்டுமே கொண்டு எழுத்துகள் மற்றும் எண்களை உருவாக்கினார். 

1829-ம் ஆண்டு இந்த புதியமுறையை பிரெய்லி உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். இருப்பினும் 19-ம் நூற்றாண்டில் தான் உலகளவில் அறியப்பட்டது. 100 ஆண்டுகள் கடந்தும் ஏ. டி.எம், புத்தகம் போன்றவற்றை சாதாரண மக்களை போன்று யாருடைய உதவியும் இன்றி பார்வை திறன் குறைபாடுடையவர்கள் பயன்படுத்துவதற்கு பிரெய்லி கண்டறிந்த கற்றல் முறை முக்கிய காரணமாக உள்ளது. 

இவ்வாறு பார்வை திறன் குறைபாடுடையவர்களுக்கு கற்றலின் முறையை எளிதாக்கிய லூயிஸ் பிரெய்லியை நினைவு கூறும் விதமாக அவர் பிறந்த தினமான ஜனவரி 4-ந் தேதி(இன்று) ஒவ்வொரு ஆண்டும் உலக பிரெய்லி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.