உடல் நிலையும், மன நிலையும் ஒருசேர சீராக இருப்பின் வாழ்க்கை நன்றாக அமையும். உடலில் ஏற்படும் குறைகள் மட்டு மின்றி மனதினில் தோன்றும் பாதிப்புகளாலும் நோய் தாக்குதல் ஏற்படுகிறது. நோயற்ற உடலும், குறையற்ற மனமும் அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. இருப்பினும் பலரும் ஆரோக்கிய நிலையை இழந்து கொண்டு தான் வாழ்ந்து வருகிறோம். இன்றைய சூழ்நிலையில் நோய்க்கிருமிகளால் உருவாகக் கூடிய நோய்களை விட சுகாதார சீர்கேடு, நோய் எதிர்ப்பு சக்தியின்மை போன்றவற்றால் ஏற்படக்கூடிய நோய்களே அதிகமாக உள்ளது. இவ்வாறு சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் பாதிக்கப்படுவதற்கு வைரஸ், சுகாதார சீர்கேடு போன்ற பல காரணிகள் இருப்பதுபோன்று மன பாதிப்பிற்கும் நம் வாழ்விடம், சுற்றுச்சூழல், இயற்கை சீர்கேடு போன்ற பல காரணிகள் காரணமாக அமைகின்றன. மேலும் மன அழுத்தம் அனைத்து நாடுகளிலும் தொடர் கதையாக அனைத்து வயதினரையும் பாகுபாடின்றி பாதிக்கிறது. இது மக்களின் அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கான திறனை வெகுவாக குறைக்கிறது. இதற்கு முக்கிய காரணங்களாக முறையற்ற உணவு முறை, உடற்ப யிற்சி இல்லாமை, உடல் பருமன், முறையான தூக்கமின்மை, எதிர்காலம் குறித்த பயம் உள்ளிட்ட பலவற்றை குறிப்பிடலாம். மனம்-உடல் ஆரோக்கியத்தை உயர்த்துவதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் ஏராளமான வழிகள் உள்ளன. உடற்பயிற்சி மேற்கொள்வது மனநலத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாகவும், சீராகவும் வைத்துக் கொள்ள சிறந்த வழியாகும். சத்தான உணவு வகைகளை சரியான நேரத்தில் உட்கொள்ளுதல் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க வழிவகுக்கிறது. இரவில் நன்றாக தூங்குவது உடல் வழிகளை தளர்த்தவும், மன அழுத்தத்தைப் போக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களி லிருந்து விடுபட தினசரி படிப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மனதை சீராக்கவும், கவனத்தை மேம்படுத்தவும் தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். ஆரோக்கியமாக இருப்பதும், அமைதியான வாழ்க்கையை மேற்கொள்வதும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இடையே சமநிலையை பேணுவதற்கானமைய இலக்காக உள்ளது. இதனை அறிந்து மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட்டு சுகாதாரமான வாழ்க்கையை வாழ்வியலோடு இணைத்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 3-ந் தேதி (இன்று) சர்வதேச மனம்-உடல் ஆரோக்கிய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.