பாலில் இருந்து பல விதமான உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுபொருட்களில் ஒன்று பாலாடைக்கட்டி(சீஸ்).

பாலிலிருந்து உருவாக்கப்படும் பக்குவப்படுத்தப்பட்ட கட்டிப் பாலால் ஆன திட உணவுபொருளையே பாலாடைக்கட்டி என்கிறோம். இது மென்மையாகவோ, கடினமாகவோ அல்லது திடக்கூழ்ம நிலையில் இருக்கும். பசு, எருமை, செம்மறி ஆடு,வெள்ளாடு போன்ற விலங்கினங்களில் இருந்து பெறப்படும் பாலானது பாலாடைக்கட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன் தயாரிப்பின் போது அமிலமாக்கப்பட்ட பால் ரென்னட் எனும் நொதியுடன் வினைபுரிந்து உறைந்து கெட்டியாகிறது. 

திடக்கூழ்ம நிலை அடைந்த பால் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு தேவையான அமைப்புடைய பாலாடைக்கட்டியாக மாற்றப்படுகிறது. சுமார் 500- க்கும் மேற்பட்ட பாலாடைக்கட்டி வகைகள் உலக பால் பொருள் உற்பத்தி ஆணையத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

இவற்றின் சுவை, மனம், தன்மை, பால் பெறப்படும் விலங்கு, தயாரிக்கும் முறை, பதப்படுத்தும் முறை, அடங்கியுள்ள கொழுப்புச் சத்து ஆகியவற்றைப் பொருத்து வேறுபடுகின்றன. இதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும், நுண்ணுயிர்க்காரணிகள், மூலிகைகள், புகை மணம் போன்றவை இவற்றின் தனிப்பட்ட நறுமணத்திற்கு காரணமாக அமைகின்றன. 

மேலும் சுவை கூட்டுப்பொருட்களான கருமிளகு, பூண்டு, குருதிநெல்லி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. பாலாடைக்கட்டி அதிக நாட்கள் கெடாமல் இருக்க குளிர் சாதன பெட்டியில் பதப்படுத்தி வைக்கப்படுகிறது. இதனை பாதுகாக்க சீஸ் காகிதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. சீஸ் காகிதத்தின் உட்பகுதி துளையுள்ள பிளாஸ்டிக்காலும், மேற்பரப்பு மெழுகினாலும் அமைக்கப்பட்டு இருக்கும். சிறந்த பாலாடைக்கட்டி உற்பத்தியாளர்கள், சீஸ் மோங்கர் என்று அழைக்கப்படுகின்றனர். 

இதற்கு தனிப்பட்ட கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. பாலாடைக்கட்டி களை வகைப்படுத்துதல், தேர்ந்தெடுத்தல், மூலப்பொருட்களை பெறுதல், தயாரித்தல், பாதுகாத்தல் போன்ற பணிகளை சீஸ் மோங்கர்கள் திறன்பட செய்கின்றனர். பாலாடைக்கட்டியில் அதன் வகைகளுக்கு ஏற்ப பலதரப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 

பாலில் உள்ள புரதமும், கொழுப்பும் இதில் அதிகளவில் அடங்கியுள்ளது. மேலும் வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் நுண்ணுட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளன. இவ்வாறு பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய உணவுப்பொருளாகவும், பலதரப்பட்ட மக்களால் விரும்பப்படும் உண வுப்பொருளாகவும் விளங்கும் பாலாடைக்கட்டிகளின் பயன்களை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 2-ந் தேதி (இன்று) பாலாடைக்கட்டி தினமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.