Tamilnadu Chief minister Mk Stalin announces rs 1000 will be given to ration card holders as pongal gift


பொங்கல் பரிசுத் தொகையாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்படும் என, தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும்.

ஆனால், கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவின.

இதற்கிடையே, 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதி வாய்ந்த அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக, 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆலோசனை நடத்தி இருந்தார்.

இந்நிலையில் இன்று, பொங்கல் பரிசுத் தொகையாக, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.