People block the road in front of Walaja Municipal Office to provide drinking water
குடிநீர் வழங்கக்கோரி வாலாஜா நகராட்சி முன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.சாலை மறியல்
வாலாஜா நகராட்சி 19-வது வார்டில் கச்சாலன் தெருவில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த 10 நாட்களாக சீரான முறையில் குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
இதனால் விரக்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 200- க்கும் மேற்பட்டவர்கள் வாலாஜா நகராட்சி அலுவலகம் எதிரே எம்.பி.டி. ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட் டனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார், நகரமன்ற தலைவர் ஹரிணி, துணைத்தலைவர் கமலராகவன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பாலாற்றிலிருந்து குடிநீர் சப்ளை செய்யும் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. அவற்றை சீரமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. விரைவில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறி, மறியலை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர்.
அதன்பேரில் சுமார் அரை மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.