புயல் காரணமாக தீவிரமடையும் கனமழை

தமிழகத்தில் 'மாண்டஸ்' புயல் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மாண்டஸ் புயல், மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது, மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் போது படிப்படியாக வலுவிழந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு நிலையாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் தீவிர புயலாக வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை தேதி காலை புயலாக வலுவிழந்தது. இது புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு தொடங்கி இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கரையைக் கடந்தது. புயல், கரையை கடந்துள்ள நிலையில், படிப்படியாக வலுவிழந்து வருகிறது. 

மாண்டஸ் புயல் எதிரொலியால், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தரைக்காற்று எச்சரிக்கை:


வட தமிழக கடலோரப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைக்கிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
 
மேலும், இன்று மீனவர்கள் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.