அன்றாட வேலையில் அயராது உழைத்து கலைத்த மனிதர்களின் அசதியை போக்கும் வகையில் பொழுதுபோக்குக்காகவும், மக்களிடம் நாட்டு நடப்புகளோடு நல்ல கருத்துகளை எடுத்துரைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதே குறும்படம். தொடக்க காலத்தில் எல்லாத் திரைப்படங்களும் குறும்படங்களாவே எடுக்கப்பட்டன. காலப்போக்கில் கதை அம்சம் மற்றும் பாடல் காட்சிகள் உள்ளிட்டவற்றின் அணி வகுப்பினால் பெரும்பாலான குறும்படங்கள் 2 மணி நேரத்திற்கு மேல் ஓடும் முழு நீள திரைப்படங்களாக உருவெடுத்தன.

குறும்படங்கள் என்பது ஒரு சில நிமிடங்களில் இருந்து 40 நிமிடங்கள் வரை மட்டுமே ஓடக்கூடிய அளவில் இருக்கும். 1910-ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அனைத்தும் 10 நிமிடங்களுக்கும் குறைவான நீளம் கொண்டவை யாகவே இருந்தன. மேலும், அந்த நேரத்தில் கேலிச் சித்திர அசை படங்கள் அனைத்தும் குறும் படங்களாகவே தயாரிக்கப்பட்டன.

தமிழில் குறும்படம் என்பது ஒரு நிகழ்வை அல்லது கருத்தை, கதையாக உருவகித்து குறுகிய நேரத்தில் தொழில்நுட்ப நேர்த்தியுடன் படகாட்சியாக மாற்றுவதை குறிக்கோளாக கொண்டு எடுக்க பட்டுவருகிறது. மிகக் குறைந்த பணச்செலவுடன் சிறந்த கதைக்கருவுடன் உருவாக்கப்படும் குறும்படங்களின் மூலம் படைப்பாளியின் திறனை உலகம் கண்டு வருகிறது. நல்லதொரு கருத்தினை திரைப்படமாக மாற்றும் அளவிற்கு திறன் உடைய மனிதர்களிடத்தில் பொருளாதார வசதி என்பது ஒரு தடையாகவே இருக்கிறது. ஆனால், பொருளாதார வசதி இல்லாத நபர்களும் தங்களின் மேலான படைப்பாற்றலை வெளிக்கொணர குறும்படங்கள் வழிவகை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்வில் நடக்கும் சிறுசிறு நிகழ்வுகளும் பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சான்றாக குறும்படங்கள் இருந்து வருகிறது. வாழ்க்கையின் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த குறும்படங்கள் பொதுமக்களிடம் பெருமளவில் வரவேற்பை பெற்று வருகின்றன. தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு படைப்பாளிகள் குறும்படங்கள் வாயிலாக அனைவரது மனதிலும் இடம்பிடித்து வருகின்றனர். இத்தகு சிறப்பு வாய்ந்த குறும்படம் குறித்து அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 28-ந் தேதி தேசிய குறும்பட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.