🌸 1954ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி இந்திய திரைபடத்துறையில் முக்கிய பங்காற்றிய நடிகர் கமல்ஹாசன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பிறந்தார்.


🌸 1665ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி உலகின் மிகப் பழமையான தி லண்டன் கசெட், முதலாவது இதழ் வெளியானது.

🌸 1910ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி உலகின் முதலாவது விமான தபால் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.


நினைவு நாள் :-


கிருபானந்த வாரியார்


👉சுவாரஸ்யமான, எளிய நடையில் ஆன்மிகக் கருத்துகளை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரில் பிறந்தார்.

👉இவருடைய தந்தை ஒருமுறை, தான் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்கு செல்ல இயலாததால், இவரை அனுப்பி வைத்தார். மடைதிறந்த வெள்ளமாகப் பெருக்கெடுத்த 18 வயது இளைஞனின் சொல்லாற்றல் அவையோரை மெய்மறக்கச் செய்தது. இவருக்கு முதல் சொற்பொழிவே பேரும் புகழும் பெற்றுத் தந்தது.

👉குழந்தைகளுக்கு தாயின் பெயரை முதலெழுத்தாகப் போட வேண்டும் என்பதை முதன்முதலாகக் கூறியவர் இவர்தான். எம்.ஜி.ஆருக்கு 'பொன்மனச் செம்மல்' என்ற பட்டத்தை சூட்டியது இவர்தான். ஆன்மிக அறப்பணிகளுக்காக ஏராளமான விருதுகள் பெற்றவர். இவருக்கு சென்னை தமிழிசை மன்றம் 'இசைப் பேரறிஞர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது.

👉வாழ்நாள் முழுவதும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் பக்தி, நன்னெறியை மக்களிடையே வளர்த்தார். சிவனருட்செல்வர், கந்தவேல் கருணை, ராமகாவியம், மகாபாரதம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நூல்கள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

👉செந்தமிழ்க் கடல், அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி என்றெல்லாம் போற்றப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 87வது வயதில் 1993ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி விமானப் பயணத்தின் போது மறைந்தார்.


பிறந்த நாள் :-


சர்.சி.வி.இராமன்

🌟 உலகம் போற்றும் இந்திய அறிவியல் மேதை சர் சந்திரசேகர வெங்கட ராமன் 1888ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைகாவல் என்னும் ஊரில் பிறந்தார்.

🌟 அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் அறிவியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இல்லாததால், கொல்கத்தாவில் நிதித்துறை துணை தலைமை கணக்கராக பணியில் சேர்ந்தார். மகேந்திரலால் சர்க்கார் நிறுவிய இந்திய அறிவியல் வளர்ச்சி கழகத்தில் பகுதி நேரமாக வேலை செய்தார். இசைக்கருவிகளின் அதிர்வுகள், ஒளிச் சிதறல் பற்றி ஆய்வுகளை செய்தார்.

🌟 ஒளி ஒரு பொருளில் ஊடுருவிச் செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர்.

🌟 இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு 1930ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமே படித்த ஒருவர் நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறையாகும்.

🌟 இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1954ஆம் ஆண்டு இவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு அகில 'உலக லெனின் பரிசு' அளிக்கப்பட்டது. பெரும் புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் சர்.சி.வி.இராமன் தன்னுடைய 82வது வயதில் (1970) மறைந்தார்.


மேரி கியூரி

🌷 ஒவ்வொரு பெண்ணிற்கும் உதாரணமாக திகழும் அறிவியல் மேதை மேரி கியூரி 1867ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி போலாந்தின் வார்சா நகரில் பிறந்தார்.

🌷 இவர் ரேடியம், பொலோனியம், தோரியம் போன்ற கதிர்வீச்சு தனிமங்களை கண்டுபிடித்துள்ளார். பிறகு உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க ரேடியம் பயன்படுத்தப்பட்டது. அதனை 'கியூரி தெரபி' என்று அழைத்தனர்.

🌷 இவருடைய சாதனைகள் கதிரியக்கம் பற்றிய ஓர் கோட்பாடு, கதிரியக்க ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் நுட்பங்கள் ஆகியனவாகும். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை 1903, 1911ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார்.

🌷 மருத்துவ துறையில் மேன்மையை ஏற்படுத்திய மேரி கியூரி தனது 66வது வயதில் (1934) மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


335 – அலெக்சாந்திரியாவின் அத்தனாசியார் கான்ஸ்டண்டினோபில் நகருக்கு தானியங்களை எடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

1492 – உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது.

1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது.

1775 – வட அமெரிக்காவில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் உடன்பாட்டில் வர்ஜீனியா குடியேற்றத்தின் பிரித்தானிய ஆளுநர் ஜான் மறே கையெழுத்திட்டார்.

1893 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1907 – மெக்சிக்கோவில் யேசுசு கார்சியா என்பவர் டைனமைட்டு நிரப்பப்பட்ட எரியும் தொடருந்தை ஆறு கிமீ தூரம் தனிமையான இடத்துக்கு செலுத்தி வெடிக்க வைத்து நக்கோசாரி டி கார்சியா கிராமம் எரியாமல் காப்பாற்றினார்.

1910 – உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1913 – அமெரிக்காவின் வடமேற்குப் பகுதி, மற்றும் கனடாவில் ஒண்டாரியோ பகுதிகளை பெரும் புயல் தாக்கியது. 250 பேர் உயிரிழந்தனர், பெரும் சேதம் ஏற்பட்டது.

1916 – அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் தொடருந்து எச்சரிக்கைக் கதவுகளை உடைத்து கால்வாய் ஒன்றில் வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர்.[1]

1917 – அக்டோபர் புரட்சி: விளாதிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் உருசியாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய யூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது). போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.

1917 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் உதுமானியரிடம் இருந்து காசாப் பகுதியைக் கைப்பற்றினர்.

1918 – மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.

1919 – உருசியப் புரட்சியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று, 10,000 இற்கும் அதிகமான பொதுவுடைமைவாதிகள் அமெரிக்காவின் 23 நகரங்களில் கைது செய்யப்பட்டனர்.

1929 – நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.

1931 – மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.

1940 – வாசிங்டனில் டகோமா குறும்பாலம் அமைக்கப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில், கடும் புயலில் சிக்கி இடிந்து வீழ்ந்தது.

1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் மருத்துவக் கப்பல் ஆர்மீனியா நாட்சி ஜெர்மனியின் விமானக் குண்டுவீச்சில் சேதமடைந்து மூழ்கியது. 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1944 – சோவியத் உளவாளி ரிச்சார்டு சோர்கி சப்பானியரால் கைப்பற்றப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.

1944 – பிராங்க்ளின் ரூசவெல்ட் நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1956 – சூயெசு நெருக்கடி: எகிப்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ஐக்கிய இராச்சியம், பிரான்சு, இசுரேல் ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கேட்டது.

1956 – அங்கேரியப் புரட்சி, 1956: சோவியத்-ஆதரவு யானொசு காதர் புடாபெஸ்ட் திரும்பி, அங்கேரியின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1975 – வங்காளதேசத்தில், அபூ தாகிர் தலைமையில் படையினர் பிரிகேடியர் காலிது மொசாரபைக் கொலை செய்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த இராணுவத் தலைவரும், பின்னாளைய அரசுத்தலைவருமான சியாவுர் ரகுமானை விடுவித்தனர்.

1983 – அமெரிக்க மேலவைக் கட்டடத்தில் குண்டு வெடித்து, பெரும் சேதம் ஏற்பட்டது.

1987 – தூனிசியாவில், அபீப் போர்கீபா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.

1989 – கிழக்கு செருமனியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து பிரதமர் வில்லி ஸ்டோப் தலைமையிலான அரசு பதவி விலகியது.

1991 – மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. தீநுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.

1994 – அமெரிக்காவின் வட கரொலைனா பல்கலைக்கழகத்தின் மாணவர் வானொலி நிலையம் உலகின் முதலாவது இணைய வானொலி சேவையை ஒலிபரப்பியது.

2000 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2002 – அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.

2007 – பின்லாந்து பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

2012 – குவாத்தமாலாவில் பசிபிக் கரையில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 52 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1186 – ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1241)

1728 – ஜேம்ஸ் குக், ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர், நாடுகாண் பயணி (இ. 1779)

1812 – வீர புரன் அப்பு, இலங்கை விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1848)

1858 – பிபின் சந்திர பால், இந்திய செயற்பாட்டாளர், கல்வியாளர் (இ. 1932)

1867 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1934)

1879 – லியோன் திரொட்ஸ்கி, செஞ்சேனையைத் தோற்றுவித்த உருசியப் புரட்சியாளர் (இ. 1940)

1888 – சி. வி. இராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (இ. 1970)

1909 – என். ஜி. ரங்கா, ஆந்திர அரசியல்வாதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1995)

1913 – சமர் முகர்ஜி, மேற்கு வங்க இடதுசாரி அரசியல்வாதி (இ. 2013)

1913 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 1960)

1918 – பில்லி கிரஹாம், அமெரிக்க எழுத்தாளர்

1922 – அழ. வள்ளியப்பா, தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1989)

1929 – எரிக் காண்டல், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க மருத்துவர்

1938 – டொனால்டு பிளெமிங், கனடிய வேதியியலாளர்

1939 – பார்பாரா இலிசுகோவ், அமெரிக்கக் கணினி அறிவியலாளர்

1941 – எர்னஸ்ட் முத்துசாமி, குவாதலூப்பே-பிரான்சிய அரசியல்வாதி

1943 – மைக்கேல் ஸ்பென்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்

1943 – சில்வியா கார்ட்ரைட், நியூசிலாந்து அரசியல்வாதி

1954 – கமல்ஹாசன், தமிழக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி

1959 – சிறிநிவாஸ், இந்தியப் பாடகர்

1969 – நந்திதா தாஸ், இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர்

1975 – வெங்கட் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்

1980 – கார்த்திக், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்

1981 – அனுசுக்கா செட்டி, இந்திய நடிகை

இன்றைய இறப்புகள்


644 – உமறு இப்னு அல்-கத்தாப், இசுலாமியக் கலீபா (பி. 590)

1627 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (பி. 1569)

1836 – ஆ. குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1783)

1862 – பகதூர் சா சஃபார், முகலாயப் பேரரசர் (பி. 1775)

1913 – ஆல்பிரடு அரசல் வாலேசு, பிரித்தானிய உயிரியலாளர் (பி. 1823)

1947 – கோ. நடேசையர், இந்திய-இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1887)

1951 – என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைப் பாடகி, நடிகை

1962 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்காவின் 39வது முதல் சீமாட்டி (பி. 1884)

1978 – ஜீவராஜ் மேத்தா, குசராத்து மாநிலத்தின் 6வது முதலமைச்சர் (பி. 1887)

1981 – வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட், அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1885)

1993 – திருமுருக கிருபானந்த வாரியார், இந்திய ஆன்மிக சொற்பொழிவாளர் (பி. 1906).

2000 – நிமலன் சௌந்தரநாயகம், இலங்கை அரசியல்வாதி (பி. 1950)

2000 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (பி. 1910)

2011 – ஜோ பிரேசியர், அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் (பி. 1944)

2014 – தோர்ப்சான் சிக்கிலேண்டு, நார்வே வேதியியலாளர் (பி. 1923)

இன்றைய சிறப்பு நாள்


அக்டோபர் புரட்சி நாள் (உருசியா (அதிகாரபூர்வமற்றது), பெலருஸ், கிர்கிசுத்தான்)