மாநில அளவிலான சீனியர் டென்னிஸ்பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2022-23 போட்டிகள், சோளிங்கர் யூனிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில், ஆண்கள் பிரிவில் 16 மாவட்ட அணிகள், பெண்கள் பிரிவில் 6 மாவட்ட அணிகள் என மொத்தம் 22 அணியினர் கலந்துகொண்டனர். ஆண்கள் பிரிவில் ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட அணிகளுக்கு இடையே நடந்த இறுதி போட்டியில் ராணிப்பேட்டை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
பெண்கள் பிரிவில் நாமக்கல் அணி மற்றும் ராணிப்பேட்டை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் நாமக்கல் அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
சாம்பியன்ஷிப் ஒட்டு மொத்த செயல்திறனை கருத்தில்கொண்டு, போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 14 வீரர்கள் மற்றும் 14 வீராங்கனைகள், தமிழ்நாடு டென்னிஸ்பால் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டில் நவ.12, 13 தேதிகளில் நடக்கவுள்ள சீனியர் தென்மண்டல அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் அடுத்த மாதம் 8 முதல் 11ம் தேதி வரை 4 நாட்கள் ஜம்முவில் உள்ள எம்.ஏ.ஸ்டேடியத்தில் தேசிய அளவிலான டென்னிஸ்பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
வெற்றிபெற்ற ராணிப்பேட்டை அணியினரை பாராட்டி, தமிழ்நாடு டென்னிஸ்பால் கிரிக்கெட் சங்க மாநில துணைத்தலைவர் நரசிம்மன் வெற்றிக் கோப்பை வழங்கி பாராட்டினார்.