சோளிங்கர் அடுத்த கோவிந்தராஜபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (53). இவர் ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள தனியார் வங்கியில் இரவு காவலராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்து நேற்று முன்தினம் இரவு மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.
இது குறித்து இறந்த ராமமூர்த்தியின் மனைவி சுமதி ராணிப்பேட்டை போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் பார்த்தசாரதி, சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாமலை ஆகியோர் வழக்கு பதிவு செய்து சுந்தரமூர்த்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.